22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணி புதிய கேப்டனான அஜிங்கிய ரஹானே தலைமையில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. 3 முறை சாம்பியனான அந்த அணி தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 22-ம் தேதி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை சந்திக்கிறது.


கடந்த ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ஸ்ரேயஸ் ஐயர் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறி உள்ளதால் அனுபவம் வாய்ந்த அஜிங்க்ய ரஹானே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். வீரர்கள் மெகா ஏலத்தில் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயருக்கு கூடுதல் பொறுப்பாக துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.


முன்னாள் மேற்கத்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஓட்டிஸ் கிப்சன் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சர்வதேச அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்கு வகித்தார்.


கேப்டனாக அஜிங்கிய ரஹானேவுக்கு இந்த சீசன் பெரிய சவாலாக இருக்கக்கூடும். ஏனெனில் அவர், ஐபிஎல் தொடரில் கேப்டனாக இதற்கு முன்னர் பெரிய அளவில் சாதித்தது இல்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரஹானே 24 போட்டிகளில், 9-ல் மட்டுமே வெற்றியை ருசித்தார். 14 போட்டிகளில் தோல்வியடைந்தார். இதுதவிர 2017-ம் ஆண்டில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்தியபோது ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தார்.


கேப்டனாக ரஹானே பேட்டிங்கில் 25 ஆட்டங்களில் 25.34 சராசரியுடன் 583 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக 2019-ம் ஆண்டு ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 70 ரன்கள் சேர்த்திருந்தார். கொல்கத்தா அணி ஒன்றும் ரஹானேவுக்கு புதிதல்ல. இதே அணிக்காக அவர், கடந்த 2022-ம் ஆண்டு விளையாடியிருந்தார். அப்போது 7 ஆட்டங்களில் சராசரி 19 உடன் 133 ரன்கள் சேர்த்திருந்தார்.
அணியில் வேகப்பந்து வீச்சு துறையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாதது பின்னடைவை கொடுக்கக்கூடும். மிட்செல் ஸ்டார்க்கை விடுவித்த பின்னர் தென் ஆப்பிரிக்காவின் அன்ரிச் நோர்க்கியாவை ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி கடந்த சீசனில் நோர்க்கியா ஓவருக்ககு சராசரியாக 13.36 ரன்களை தாரை வார்த்திருந்தார்.


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனும் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இவர், 2023-24 பிக்பாஷ் லீக்கில் ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார். ஆனால் அவர், ஐபிஎல் தொடரில் இதற்கு முன்னர் விளையாடியது இல்லை. ஒரே நம்பிக்கை வளர்ந்து வரும் நட்சத்திரமான இந்தியாவின் ஹர்ஷித் ராணா மட்டுமே.
கடந்த சீசனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்ட பில் சால்ட், இம்முறை பெங்களுரு அணிக்கு மாறி உள்ளதால் அவரது பணியை குயிண்டன் டி காக் தொடரக்கூடும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.


மோதல் விவரம்:
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரு – மார்ச் 22 – கொல்கத்தா – இரவு 7.30
ராஜஸ்தான் ராயல்ஸ் – மார்ச் 26 – குவாஹாட்டி – இரவு 7.30
மும்பை இந்தியன்ஸ் – மார்ச் 31 – மும்பை – இரவு 7.30
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஏப்ரல் 3 – கொல்கத்தா – இரவு 7.30
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ஏப்ரல் 6 – சென்னை – இரவு 7.30
சென்னை சூப்பர் கிங்ஸ் – ஏப்ரல் 11 – சென்னை – இரவு 7.30
பஞ்சாப் கிங்ஸ் – ஏப்ரல் 15 – முலான்பூர் – இரவு 7.30
குஜராத் டைட்டன்ஸ் – ஏப்ரல் 21 – கொல்கத்தா – இரவு 7.30
பஞ்சாப் கிங்ஸ் – ஏப்ரல் 26 – கொல்கத்தா – இரவு 7.30
டெல்லி கேபிடல்ஸ் – ஏப்ரல் 29 – டெல்லி – இரவு 7.30
ராஜஸ்தான் ராயல்ஸ் – மே 4 – கொல்கத்தா – இரவு 7.30
சென்னை சூப்பர் கிங்ஸ் – மே 7 – கொல்கத்தா – இரவு 7.30
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மே 10 – ஸைதராபாத் – இரவு 7.30
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரு – மே 17 – பெங்களுரு – இரவு 7.30


கொல்கத்தா படை: ரஹானே (கேப்டன்), குயிண்டன் டி காக், மணீஷ் பாண்டே, ரோவ்மன் பாவெல், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரஹ்மானுல்லா குர்பாஸ், ரமன்தீப் சிங், ரிங்கு சிங், லவ்னித், சிசோடியா, வெங்கடேஷ் ஐயர், ஆந்த்ரே ரஸ்ஸல், சுனில் நரேன், அனுக்குல் ராய், மொயீன் அலி, அன்ரிச் நோர்க்கியா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா, மயங்க் மார்க்கண்டே, ஸ்பென்சர் ஜான்சன், உம்ரான் மாலிக்.


தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங்.


கழற்றிவிடப்பட்ட வீரர்கள்:
ஸ்ரேயஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க், பிக் சால்ட், நித்திஷ் ராணா.