22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

ஐஐடி மெட்ராஸின் இஎக்ஸ்டிஇஎம் மையம் (ExTeM), ‘விண்வெளியில் தயாரிப்போம்’ என்ற அடிப்படையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. விண்வெளியில் 3டி-பிரின்ட் கட்டடங்கள், மெட்டல் ஃபோம்கள், ஆப்டிகல் ஃபைபர் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து இந்த மையம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. தண்ணீர் இல்லாமல் கான்கிரீட் கட்டுமானம் போன்ற புதுமையான முறைகளையும் இந்த மையம் உருவாக்கி வருகிறது.
பொதுவாக, விண்வெளியில் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு பூமியில் இருந்தே பொருட்கள் விண்கலங்கள் மூலமாக விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும்.


ஆனால், இது எளிதான ஒன்றல்ல. ஒவ்வொரு விண்கலத்திலும் குறிப்பிட்ட எடையுள்ள பொருட்களையே ஏற்றிச் செல்ல முடியும். அதாவது பேலோட் (Payload) எனும் ஒரு எடை வரம்பு உள்ளது.


உதாரணத்திற்கு, நாசா தயாரித்ததிலேயே மிகவும் சக்தி வாய்ந்த விண்கலம் என விவரிக்கப்படும் ‘ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம்’ (Space launch System) மூலம், நிலவுக்கு 27,000 கிலோகிராம் வரையிலான பொருட்களைக் கொண்டு செல்ல முடியும். பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு (Lower Earth Orbit) 70,000 கிலோகிராம் வரையிலான பொருட்களைக் கொண்டு செல்ல முடியும் என நாசா கூறுகிறது.


அதுவே சந்திராயன்-3 திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட எல்விஎம்-3 (LVM-3) ராக்கெட் மூலம், பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு 8000 கிலோ வரையிலான பொருட்;களை கொண்டு செல்ல முடியும் என இஸ்ரோ கூறுகிறது.


இதற்கான தீர்வின் ஒரு பகுதி தான், ஐஐடி மெட்ராஸின் எக்ஸ்ட்ரா டெரஸ்டிரியல் மேனுஃபேக்சரிங் (Extraterrestrial Manufacturing) ஆய்வு மையம், அதாவது பூமியல் இருந்து பொருட்களைக் கொண்டு செல்லாமல், விண்வெளியில் கிடைக்கும் பொருட்களை வைத்து, மறுசுழற்சி செய்து புதிய கட்டமைப்புகளை உருவாக்குவது அல்லது மேம்படுத்துவது.


இதுதான் ‘விண்வெளியில் தயாரிப்போம்’ (Make in Space) என்று விவரிக்கிறார் ஐஐடி மெட்ராஸின் பேராசிரியரும், இஎக்ஸ்டிஇஎம் மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான சத்யன் சுப்பையா இதன் மூலம், நிலவில் அல்லது செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்துவதற்கு தேவையான கட்டமைப்புகளை விண்வெளியில் உருவாக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.


“உதாரணத்திற்கு, செவ்வாய் கிரகத்தின் மண்ணைப் பயன்படுத்தி ‘நீரில்லா கான்கிரீட்டை’ உருவாக்குவதற்கான ஒரு நுட்பம் இந்த ஆய்வின் ஒரு பகுதியாக உள்ளது. இது முழுமையடைந்தால், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மனித குடியிருப்புகள் மற்றும் உள் கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கு இது பெருமளவில் உதவும்.”


இந்த இஎக்ஸ்டிஇஎம் ஆய்வு மையத்தின் முக்கிய பணிகள், விண்வெளியில் மற்றும் பூமியில் அவை எவ்வாறு பயன்படும் என்பன குறித்து பேராசிரியர் சத்யன் சுப்பையா பின்வருமாறு விளக்கினார்.


1.மைக்ரோ கிராவிட்டி சூழலில் வெல்டிங் (Welding)
இந்த திட்டத்தின் நோக்கம், மைக்ரோ கிராவிட்டி சூழலில் அலுமினியத்திற்கான வெல்டிங் நுட்பங்களை ஆராய்வது. அலுமினியம், விண்வெளி கட்டமைப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு இலகு ரக பொருள்.


இந்த ஆய்வின் முடிவுகள், விண்வெளியில் இஸ்ரோ நிறுவ இருக்கும் பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனப்படும் இந்திய விண்வெளி மையத்தின் பழுது பார்க்கும் பணிகள் அல்லது கருவிகளின் 3டி-பிரின்ட் போன்ற பணிகளுக்கு பயன்படும்.


வேற்றுக்கிரகச் சூழல்களில் வாழ்விடங்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்க தேவையான துல்லியமான வெல்டிங் நுட்பங்களுக்கும் இது பயன்படும்.


2.துத்தநாகத்தைப் பயன்படுத்தி மெட்டல் ஃபோம்கள் (Metal Foam)
மெட்டல் ஃபோம் என்பது அலுமினியம், துத்தநாகம் அல்லது டைட்டானியம் போன்ற உலோகங்களிலிருந்து தயாரிக்கப்படும் இலகு ரக நுண் துளைகளுடைய ஒரு பொருள்.
அதிக ஆற்றலை உள்வாங்கக் கூடிய திறன், உயர் வெப்பநிலையை தாங்கக்கூடிய திறன் போன்ற தனித்துவமான பண்புகள் கொண்டவை இந்த மெட்டல் ஃபோம்கள்.
இதனால், விண்வெளி, வாகன உற்பத்தி, உயிரி மருத்துவம் போன்ற பல துறைகளில் இது பயன்படுகிறது.


மைக்ரோ கிராவிட்டி டிராப்டவர் ஆய்வகத்தில் இந்த மெட்டல் ஃபோம்கள் ஆராயப்படுகின்றன.


3.ஆப்டிகல் ஃபைபர் உற்பத்தி
இந்த திட்டத்தின் நோக்கம் மைக்ரோ கிராவிட்டி சூழல்களில் N ZBLAN (Zirconium-Barium-Lanthanum-Aluminum-Sodium) ஆப்டிகல் ஃபைபர்களை உற்பத்தி செய்வது.


ஃபைபர் ஆப்டிக்ஸ் என்பது, மெல்லிய இழைகள் வழியாக ஒளி சமிக்ஞைகள் மூலம் தரவுகளை அனுப்பும் அறிவியல் தொழில்நுட்பம். இந்த மெல்லிய இழைகளே ஆப்டிகல் ஃபைபர் என அழைக்கப்படுகிறது.


இதன் அதிவேக தரவு பரிமாற்றத் திறன், பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக தொலைத்தொடர்பு, இணையம் உட்பட பல துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.