22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

“ஒவ்வொரு ஆணும் ஜேம்ஸ் பாண்டாக இருக்க விரும்புகிறான். ஒவ்வொரு பெண்ணும் பாண்டுடன் இருக்க விரும்புகிறாள்” என்பது புகழ்பெற்ற வாசகம். இத்தகைய பிரபலமான கதாபாத்திரத்தை உருவாக்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் இயான் ஃபிளெமிங்.


திரில்லர் பட ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஏகபோகமாய் பூர்த்தி செய்வதே ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் வெற்றி சூத்திரம். ஏறக்குறைய 63 ஆண்டுகள், 3 தலைமுறை ரசிகர்கள் என தேசம், கலாச்சாரம், மொழி எல்லைகளை கடந்து பாண்ட் படங்கள் கொண்டாடப்படும்.
உலகின் கால்வாசி மக்கள் குறைந்தது ஒரு பாண்ட் படத்தையாவது ரசித்திருப்பார்கள். திரைப்படங்களில் எத்தனையோ வில்லன்களைச் சமாளிக்கும் திறன் கொண்ட உலக மகா உளவாளி ஜேம்ஸ் பாண்டை நெருக்கடிக்கு தள்ளியது கொடிய கொரோனா.


2019 நவம்பரில் வெளியாகியிருக்க வேண்டிய ‘நோ டைம் டு டை’ (No Time to Die), ஒன்றரை ஆண்டுகள் பெட்டிக்குள் முடங்கி ஒரு வழியாக 2021-ஆம் ஆண்டு வெளியானது. இதுவே தற்போது பூதாகரமான பிரச்சனையாக வெடித்துள்ளது.


ஜேம்ஸ் பாண்ட் படங்களை தயாரிப்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டேன்ஜக், பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட இயான் மற்றும் அமேசான் நிறுவனங்கள். இதில் இயான் நிறுவனத்தின் உரிமையாளர் பார்பரா ப்ரோக்கோலிக்கும் அமேசான் நிறுவனத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கடந்த 6 ஆண்டுகளாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்ட க்ளீண்டியன்ஸ்ட் என்ற பெரும் தொழிலதிபர் ஜேம்ஸ் பாண்ட் பெயரின் உரிமை தனக்கு வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.


ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உயிருடன் இருப்பதை உறுதி செய்வதே தனது திட்டம் என கூறும் க்ளீண்டியன்ஸ்ட், இன்றைய ரசிகர்களும் வருங்கால சந்ததியினரும் ஜேம்ஸ் பாண்டை ரசிக்க, முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் சட்டத்தின் கீழ், பிரபலமான பெயர்களை அசல் உரிமையாளர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தா விட்டால் அதன் வர்த்தக உரிமையை எதிர்த்து வழக்கு தொடரலாம்.


2021-ஆம் ஆண்டுக்கு பிறகு “ஜேம்ஸ் பாண்ட் ஸபெஷல் ஏஜென்ட் 007,” “ஜேம்ஸ் பாண்ட் 007,” “பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்” என்ற சொற்றொடர்கள் எதிலும் பயன்படுத்தப்படவில்லை என்பது க்ளீண்டியன்ஸ்டின் வாதம். க்ளீண்டியன்ஸ்ட் துபாயில் 43 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய ஓட்டலை கட்டி வருகிறார். அங்கு ஜேம்ஸ் பாண்ட் டெஸ்டாரண்ட், ஜேம்ஸ் பாண்ட் காக்டெய்ல் லவுன்ஜ் என பெயர்களை வைக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.


க்ளீண்டியன்ஸ்ட் தொடர்ந்த வழக்கிற்கு ஜேம்ஸ் பாண்ட் பெயரின் உரிமையை வைத்துள்ள டேன்ஜக் நிறுவனம் பதில் அளிக்க 2 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை இந்த வழக்கு க்ளீண்டியன்ஸ்ட்-க்கு சாதகமாக முடிந்துவிட்டால், ஜேம்ஸ் பாண்ட் படங்களை திரையில் நாம் காண முடியாது என்பதே நிதர்சனம்.