22 Tuesday, 2025
2:22 pm
Spread the love


பாண்டிய நாட்டில் சமணம் தழைத்து இருந்தது. சமணர் இருக்கைகள் இருந்தன. மக்களும், மன்னன் கூன் பாண்டியனும் சமணத்தை ஆதரித்தனர். கூன் பாண்டியனது மனைவி மங்கயர்க்கரசியார். அமைச்சர் குலச்சிறையார் இவர்கள் இருவரும் சிறந்த சிவபக்தர் ஆவார். கோயில்கள் பூசையற்றுத் தவித்ததைக் கண்டு இவர்கள் வாடினர். மன்னனின் மனத்தைத் திருப்ப ஞானசம்பந்தரை அழைத்துவரத் தூது அனிப்பினர். சம்பந்தரும் அத்தூதை ஏற்றார். பாண்டி நாட்டுக்கு வந்தார். வெப்ப நோயால் வாட்டப்பட்ட மன்னனைக் குணப்படுத்தினார். மன்னனின் பேராதரவைப் பெற்றார். சமணர்களுடன் விவாதத்தில் வென்றார். சைவம் உயர்வு பெற்றது. சமணம் தோல்விப் பாதைக்குத் திருப்பப்பட்டது. சமணப் பெரியார்களைக் கழுமரம் வரவேற்றது. பின்பு சம்பந்தர் பாண்டி நாட்டிலிருந்து கிளம்பி பௌத்தர்களது இருக்கையாகிய போதி மங்கையை அடைந்தார். அங்கே பௌத்தத் துறவிகளுடன் வாதில் ஈடுபட்டார். வாதில் தோற்ற பௌத்தர்கள் சைவர்களாயினர்.


ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், ஆகிய மூவரும் பாடிய பாடல்கள் தொகுப்புத் தேவாரம் எனப்படும். முதல் திருமுறை, இரண்டாம் திருமுறை, மூன்றாம் திருமுறை என்று அழைக்கப்படும் தேவாரத் திருமுறைகளைப் பாடியவர் திருஞானசம்பந்தர் ஆவார். இதுவரை கிடைத்துள்ள தேவாரத் திருப்பதிகங்களின் மொத்த எண்ணிக்கை 796 ஆகும். பாடல்களின் எண்ணிக்கை 8250 ஆகும். இவற்றுள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்கள் 1600 என்பர். ஆனால் இன்று 384 பதிகங்களே கிடைத்துள்ளன. (4181 பாடல்கள் மட்டுமே) பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு என்பதை முன்னமே படித்தோம்.


சொற;கோவும் தோணிபுதத் தோன்றலுமென் சுந்தரனும்
சிற்கோல வாதவூர்த் தேசிகரும் – முற்கோலி
வந்தில ரேல் நீறெங்கே மாமறை நூலெங்கே
எந்தைபிரான் அஞ்செழுத் தெற்கே.


(சொற்கோ – திருநாவுக்கரசர் தோணிபுரத் தோன்றல் – திருஞானசம்பந்தர் தோணிபுரம் – சீர்காழி. வாதவூர்த் தேசிகர் – மாணிக்கவாசகர்.)


என்ற பாடல் உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனும் நாலவர் இல்லாவிட்டால் திருநீறு இல்லை. பக்தி இலக்கியம் இல்லை. சிவனது ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமச்சிவாய’ இல்லை என்பது உண்மைதான். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரையும் சைவத்தின் ‘இருகண்கள் என்று போற்றுவர்.
திருஞானசம்பந்தர் சீர்காழியில் கவுணிய வேதியர் குலத்தில் பிறந்தவர். சிவபாத இருதயர்க்கும், பகவதியாருக்கும் மகனாய்த் தோன்றியவர். இவரது காலம் கி பி. 7ம் நூற்றாண்டின் இடைப்பகுதி ஆகும். திருநாவுக்கரசர் இவர் காலத்தவர். சம்பந்தருக்கு, சிவனும் உமையும் ஒருங்கே தோன்றிக் காட்சி தந்தனர் என்றும், சிவபெருமான் கூறியவாறு உமையம்மை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டினார் என்றும் பெரிய புராணம் கூறுகிறது. பதினாறு ஆண்டு காலமே வாழ்ந்தவர். இறைவி ஞானப்பால் வழங்கியமையால் ‘திருஞானசம்பந்தன்’ என்ற பெயர் பெற்றார். ‘ஆளுடைய பிள்ளையார்’ என்றும் அழைக்கப்படுவார். சீர்காழியில் பிறந்ததால் ‘காழி வள்ளல்’ என்ற பெயரும் இவருக்கு உண்டு. ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ‘ஞானசம்பந்தன்’ என்று சுந்தரரால் போற்றப்படுபவர்.அவர் பாடிய பாடல்கள் ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் என்பர். இப்போது கிடைப்பவை 4181 பாடல்கள் மட்டுமே. எல்லாப் பாடல்களும் இசையோடு பாடப்பட்டவை. தன்னுடன் தன் பாடல்களுக்கு யாழ் இசைத்த தீண்டாக்குலத்தைச் சார்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தன்னுடன் பல தலங்களுக்கும் கோயில்களுக்கும் அழைத்துச் சென்றார். சாதி வேறுபாடு, தீண்டாமை போன்ற மூட நம்பிக்கைகளுக்கு அவர் வாழ்விலும் இடம் இல்லை, பாடல்களிலும் இடம் இல்லை.


சோழ இளவரசியாகிய மங்கையர்கரசியார் ‘நின்றசீர் நெடுமாறன்’ எனும் கூன்பாண்டியனை மணந்து பாண்டிமாதேவியான நிகழ்ச்சி, சோழ நாட்டு அந்தணர் சம்பந்தரைப் பாண்டிய நாட்டிற்கு வந்து சைவ சமய பிரச்சாரம் செய்ய வழி வகுத்தது. சம்பந்தரது பதிகத்தின் பொருள் அமைப்பு தனித்தன்மை உடையது. இது சம்பந்தர் பதிகமே என்று சொல்லும்படி உள்ளது. சைவ சமயப் பிரசச்சாரம் செய்யும் சாதனமாகவே தன் பதிகத்தை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


திருஞானசம்பந்தர் தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்தவர். அவரது பாடல்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் இரண்டு அடிகள் இயற்கை வர்ணனையாக உள்ளன. அடுத்த இரண்டு வரிகள் இறைவனைப் பற்றி அமைந்துள்ளது. எனவே பாடல்கள் இயற்கை மீதும், இறைவன் மீதும் அவருக்கு உள்ள நாட்டத்தைப் புலப்படுத்துவனவாக உள்ளன. ‘மக்கள் மனத்தில் அவர்தம் வாழிடத்தைப் போற்றிப் பாடினால் மகிழ்வார். சமய எழுச்சியை ஏற்படுத்துவதும் எளிது. எனவே இம்முறையில் அதிக அளவு மக்களை தம் பாடல் வாயிலாகச் சைவத்திற்கு ஈர்த்தார் திருஞானசம்பந்தர் என்பார் ஆ.வேலுப்பிள்ளை.


திருஞானசம்பந்தர் பதிகம் ஒவ்வொன்றிலும் எட்டாவது பாட்டில் இராவணனைப் பற்றிய குறிப்பு வருகிறது. சம்பந்தருடன் சமகாலத்தில் வாழ்ந்த அப்பரும் இராவணனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவர்கள் கூறுவதற்கு அக்காலச் சூழல் காரணமாக இருக்கலாம். இராவணன் ஒரு பேரரசன். சிவனை மதியாமல் அவரது வழிவிடத்தையே அப்புறப்படுத்த பார்த்தான். அதன் பயனாக சிவனால் நசிவுண்டான். சிவனருள் பெற்றமையாலேயே உய்வடைந்தான். அப்பரும், சம்பந்தரும் வாழ்ந்த காலம் பல்லவர் காலத் தொடக்கம் ஆகும். அவர்கள் காலத்தில் சமண சமயம் பரவலாகப் பின்பற்றப்பட்டு வந்தது. சிவபெருமான் அருளே வடிவானவர். தவறு செய்பவர்களுக்கும் அருள் செய்பவர். இக்கருத்தை வலியுறுத்தி சைவ சமயத்தின் பெருமையைப் பரப்பினர்.


திருஞானசம்பந்தர் ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாம் பாட்டில் திருமாலும், பிரமனும் சிவனின் அடி முடியை தேடியும் காண இயலாதவர் ஆயினர் என்ற குறிப்பு இடம் பெறும். சிவன் மும்மூர்த்திகளில் ஏனைய இருவரிலும் உயர்ந்தவர் என்று சம்பந்தர் காட்டுவதாகக் கொள்ளலாம்.


திருஞானசம்பந்தரின் பத்தாம் பாடல் சமண பௌத்தர்களைப் பழித்துக் கூறும். அப்பர் பாடல்களிலும் சமண பௌத்தர் இழித்தக் கூறப்படுகின்றனர். சமண, பொளத்தர் பற்றிய சம்பந்தர் குறிப்புகளில் மிகுந்த காழ்ப்பு உள்ளது. சமண பௌத்தரை இழித்துக் கூறுவதனால் அவர்களது போலி வேடம். ஒழுக்கக்கேடு என்பவற்றைப் பொது மக்களிடம் சொல்லி அவர்களை இச்சமயங்களிலிருந்து விடுவிக்க உதவியாக இருக்கும் என்பது இதன் நோக்கமாக இருக்கலாம்.


திருஞானசம்பந்தரின் திருக்கடைக் காப்புச் செய்யுள்கள் பலவற்றில் ‘நற்றமிழ் ஞானசம்பந்தன்’ ‘தமிழ் ஞானசம்hந்தர்’’சம்பந்தன் செய்த தமிழ் மாலை’ என்று தமிழுடன் சேர்த்துச் சொல்லும் முறை உள்ளது. சமணருக்கு எதிராக சைவர் இயக்கத்தைத் தமிழன் எழுச்சியாக ஆக்கியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.


சைவ சமயத்திற்குச் சமபந்தர் செய்த தொண்டு சிறப்பானது. சைவ சமயக் குரவருள் அவரை முதல்வராகக் கொண்டு போற்றுவர். திருஞானசம்பந்தரைப் பற்றி ஆறு பிரபச்தங்களை நம்பியாண்டார் நம்பி பாடியுள்ளார். பெரிய புராணம் பாடிய சேக்கிழார் அறுபத்து மூன்று தனியடியாரையும், ஒன்பது தொகையடியாரையும் பாட எடுத்தக்கொண்ட போதும் நூலின் பெரும்பகுதியைச் சம்பந்தருக்கே ஒதுக்குகின்றார். நூலில் பாதியைச்சம்பந்தரும் மீதியைப் பிறருக்கும் ஒதுக்கி உள்ளார் என்பது பொருந்தும்.


திருஞானசம்பந்தரது பாடல்களில் தலையாய செய்தி தாய்மையின் தெய்வீகத் தன்னையே என்பார். தொ.பொ.மீ. அவர்கள். சமணம் பெண்களுக்குச் சமவுரிமை தரமறுத்தது. சமண சமயத் துறவிகள் பெண்களாக இருந்தால் அவர்களைத் திகம்பல சமணர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதைச் சம்பந்தர் ‘குரத்திகள் பேணார்’ என்று கூறுகிறார். (குறத்திகள் – சமண சமயப் பெண் துறவிகள்). ஆனால் பெண்களைக் கடியும் ஒரு சொல்லையும் காணுதல் அரிது. ‘இசை கீழான உணர்வுகளைத் தூண்டும்’ என்று சமணர் கருதினர். ‘இசை இறைவன்பால் இட்டுச் செல்லும்’ என்பது சம்பந்தரது கருத்தாகும். அவர் செந்தமிழைப் பேணுவதைப் பெரிதும் விரும்பினார். தமிழ் இலக்கியத்தில் இவரது பங்களிப்பு மகத்தானது ஆகும்.


மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

(மூன்றாம் திருமுறை. 24:1)


என்ற திருஞானசம்பந்தரது பாடல் சைவர்களின் திருமணத்தின்போது மகிழ்ச்சியுடன் பாடப்படுவது. இறைவன் பெண் ஒரு பாகனாய் இருப்பதைக் காட்டி உலகில்நல்லபடி வாழமுடியும், யாதொரு குறையும் வராது என்று நம்பிக்கை தருகிறார். அவரது பாடல்கள் ஊக்கமும், நம்பிக்கையும் ஊட்டுவன. சோர்வையோ, கலக்கத்தையோ, துன்பத்தையோ அவரது பாடல்களில் காண்பது அரிது. நாளும் கோளும் என்னன செய்ய முடியும்? அவை நல்லவையே. அடியார்க்கு மிகமிக நல்லவை’ என்று மூடநம்பிக்கையைச் சாடுகிறார். ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை, ‘திராவிட சிசு’ என்று குறிப்பிட்டுள்ளார்.


2.4.2. நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகள்:

திருநாவுக்கரசர் எனும் அப்பர் பாடிய பதிகங்கள் 4900 என்பர். ஆனால் இன்று 312 பதிகங்களே (3066 பாடல்களே) கிடைத்துள்ளன. இவை ‘அப்பர் தேவாரம்’ என அழைக்கப்படுகின்றன. நான்காம் திருமுறை, ஐந்தாம் திருமுறை, ஆறாம் திருமுறை என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவர் பாடிய பாவகைகளில், ‘தாண்டகம்’ என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவரைத் ‘தாண்டக வேந்தர்’ என்று பாராட்டுவர். ஆற்றுவெள்ளம் போல் இறைவன் திருநாமங்களை ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்கிச் சொல்லும் அமைப்புடையது தாண்டகப்பாடல். இவரது திருத் தாண்டகம் போல் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் காண முடியாது என்பர். இவருக்கு ‘அப்பர்’ ‘வாகீசர்’ என்ற பெயர்களும் உண்டு. இவர் திருஞானசம்பந்தர் காலத்தவர்.


அப்பர், சம்பந்தர் இருவருள் ஒவ்வொருவரும் மூவாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களுக்குப்பின் வந்த சுந்தரர் ஆயிரம் பாடல்கள் வரை பாடியுள்ளார். இம்மூவரும் பாடிய பாடல்களே தேவாரம் என்று அழைக்கப்படுகின்றன என்பதை ஏற்கனவே பார்தோம்.


தே – தேவன்
வாரம் – சொல்லொழுக்கமும், இசையொழுக்கமும் உள்ள பாடல்.
தேவாரம் – இறைவனைப் பற்றிய இசைப்பாடல் என்று பொருள்.


கி.பி. 7ஆம் நூற்றாண்டுத் கமிழகத்தில் சமணம் வீழ்ச்சியுறத் தொடங்கியது. சைவம் எழுச்சிபெற தொடங்கியது. அப்பரது வாழ்க்கை சமணத்தோடும், சைவத்தோடும் பின்னிப் பிணைந்துள்ளது. சைவராகப் பிறந்த அப்பர் சமண சமயத்திற்கு மாறிப் பின்பு சைவராகிப் பெருந்தொண்டு செய்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது.


பாவுற்று அல் செந்தமிழ்ப் பதிகத் தொடை
பாடிய பான்மையினால்
நாவுக்கரசு என்று உலகம் ஏழினும்
நின் நல்நாமம் நயப்புற மன்னுக.


என்று இறைவன் இவருக்கு வழங்கினான் என்று பெரிய புராணம் (செய்யுள் 1344) குறிப்பிடுகிறது. சம்பந்தர் இட்டபெயர் ‘அப்பர்’ என்பது. திருநாவுக்கரசர் பாடிய பாடல்களுள் ஒருபகுதி தாளத்தோடு கூடிய இசையோடு அமைந்த பாடல்கள். மற்றொரு பகுதி தாளமில்லாமல் இசையமைத்துப் பாடப்படுபவை. பக்தியின் உருக்கம் தத்தும்பும் பாடல்கள் இவருடையவை. திருஞானசம்பந்தரைப் போல ஆணையிட்டுக் கூறும் முறை இல்லை. பணிவும், குழைவும் மிகுதி, சிவனை நினைத்து ஏங்கும் பெண்ணாகத் தன்னைப் பாவித்துப் பாடியுள்ளார். இவரது பாடல்களில் சிவனை மறந்து காலத்தைப் போக்கியதால் ஏற்ப்பட்ட துன்பச் சுவையைக் காணலாம். எதையும் எதிர்த்து நிற்கும் பேறாற்றலைக் காணலாம். பல்லவ மன்னன் இவருக்குத் துன்பம் செய்தபோதும் மன உறுதியோடு இருந்தவர்.


நரகத்தில் இடர்ப்படோம்;: நடலை இல்லோம்:
ஏமாப்போம்: பிணியறியோம்: பணிவோம் அல்லோம்.
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.


(நடலை – துன்பம் ஏமாற்றும் – இன்புற்றமர்ந்திருப்போம்)
என்று இவரது முழக்கப்பாடல்கள் விடுதலை உணர்வு மிக்க எழுச்சிப் பாடல்களாக உள்ளன. அவ்வகையில் இவரைப் ‘புரட்சிக் கவிஞர்’ எனலாம். பக்தி மிக்கவர். சமூகப் பணி செய்தவர். சாதி குல வேறுபாடு கருதாதவர். சமுதாயக் கவிஞராகத் திகழ்ந்தவர்.