
இந்தியாவின் ஸ்மார்ட் போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக சியோமி டெக்னாலஜி நிறுவனம் இருக்கிறது. சீனாவை தலைமை இடமாக கொண்ட இந்த நிறுவனம் இந்தியாவில் சியோமி டெக்னாலஜி இந்தியா என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தையில் முதலிடத்தில் இருந்த சியோமி படிப்படியாக அந்த இடத்தை இழந்துவிட்டது. இந்தியாவில் சியோமி டெக்னாலஜி நிறுவனத்திற்கு சொந்தமாக 4704 கோடி ரூபாய் பணம் வங்கிகளில் முடக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்து வரும் சியோமி நிறுவனம் செட்டில்மெண்ட் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவில் சியோமி டெக்னாலாஜி நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சியோமி டெக்னாலஜி நிறுவனத்திற்கு சொந்தமான சில வங்கி கணக்குகளை அரசு முடக்கி வைத்திருக்கிறது. இதனால் 4,704 கோடி ரூபாயை அதில் இருந்து எடுக்க முடியாமல் தவித்து வருகிறது. வருமான வரித்துறை விசாரணை, வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை, அமலாக்கத்துறை விசாரணை என பல்வேறு விசாரணைகளை சியோமி நிறுவனம் எதிர்கொண்டிருக்கிறது. வருமான வரி இறக்குமதி வரி மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனை விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சியோமி நிறுவனம் இந்த வழக்குகளை எதிர் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக சியோமி டெக்னாலஜி நிறுவனத்தின் வங்கி கணக்குகளை இந்த அமைப்புக்ள முடக்கி வைத்திருக்கின்றன. இதனால் 4,704.21 கோடி ரூபாயை எடுக்க முடியாமல் சியோமி நிறுவனம் தவித்து வருகிறது. முன்னதாக 2024 ஆம் ஆண்டுக்கான தங்களின் வருவாய் விவரங்களை வெளியிட்ட சியோமி நிறுவனம் இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் மீதான வழக்குகள் விசாரணை அளவில் இருப்பதாகவும் அவை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்திருந்தது.