சுங்க வரி என்பது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள். பெரும்பாலான கட்டணங்கள் பொருட்களின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த வரியை, பொதுவாக அவற்றை இறக்குமதி செய்பவர்தான் செலுத்துகிறார்.

உதாரணமாக, சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் 4 டாலர் மதிப்புள்ள ஒரு பொருளுக்கு கூடுதலாக 0.40 டாலர் சுங்கக் கட்டணம் விதிக்கப்படுவது, அந்தப் பொருளுக்கான 10 சதவீத வரி எனப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்துவது, நுகர்வோர் குறைந்த விலையில் உள்ள உள்நாட்டு பொருட்களை வாங்குவதை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது, அந்நாட்டின் சொந்தப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.

அமெரிக்க பொருளாதாரத்தை வளர்த்தல், வேலை வாய்ப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் வருமான வரியை அதிகரித்தல் ஆகியவற்றுக்குத் தீர்வாகவே டிரம்ப் இந்த நடவடிக்கையைப் பார்க்கிறார்.
ஆனால், தனது முதல் ஆட்சிக் காலத்தில் டிரம்ப் விதித்த வரிகளின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பொருளாதார ஆய்வுகள், இவை இறுதியில் அமெரிக்க நுகர்வோருக்கான விலைகளை உயர்த்தியதாக முடிவுகளை முன்வைக்கின்றன.

ஃபெண்டானில் எனும் போதை மருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதைத் தடுக்க, சீனா அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தைக் கொடுப்பதே, தனது சமீபத்திய வரி விதிப்புகளின் நோக்கம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் அண்டை நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளை டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும் அதற்குக் காரணமாக, அந்நாட்டுத் தலைவர்கள் எல்லை தாண்டிய சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.