22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்…ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர்…களத்தில் நின்று விட்டால் எதிரணி சின்னாபின்னமாவது உறுதி.. என்ற புகழுரைக்குச் சொந்தக்காரர் ரோகித் சர்மா..


ஆனால், சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டிக்கு முன்பு வரை, லீக் ஆட்டங்களில் 41, 20 மற்றும் 10 ரன்களும், அரையிறுதியில் 28 ரன்களையும் மட்டுமே எடுத்தார் ரோகித் சர்மா.

இதனால், அவரது ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். இது ஒருபுறம் இருக்க, ரோகித் சர்மா பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


ரோகித் சர்மாவின் உடல் எடை அதிகமாக இருப்பதாகவும், அதை அவர் குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்த ஷமா முகமது, இதுவரை இந்தியா பார்த்திராத மோசமான கேப்டன் என்றும் விமர்சித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், தனது எக்ஸ் பதிவை ஷமா முகமது நீக்கினார். இப்படி தன் மீது அடுத்தடுத்து விழுந்த விமர்சனங்களை, அதிரடி சிக்ஸர்களால் அடித்து நொறுக்கியுள்ளார் ரோகித் சர்மா.


சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை 3-ஆவது முறையாக வென்ற அணி என்ற புதிய வரலாற்றை இந்தியா படைத்துள்ளது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யாவின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளார்.


துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே, சிக்ஸரை பறக்க விட்டு எதிரணிக்கு பயத்தை காட்டினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, 3 சிக்ஸர், 7 பவுண்டரி என 76 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு தரமான அடித்தளத்தை அமைத்தார். இதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் பட்டியலில், 2ஆவது இடத்தில் இருந்த இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் சாதனையை, ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.