22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலை உச்சித்தில் இருப்பதால் சாமானிய மக்கள் தங்கத்தின் விலையை கேட்பதோடு திருப்திபட்டுக்கொள்கின்றனர். புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது, ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சாமானிய மக்கள் தங்கத்தின் விலை எப்போது குறையும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். ஆனால் அதற்கான வாய்ப்பு இருக்காது என்றே தோன்றுகிறது. 2025ம் ஆண்டிலும் தங்கத்தின் தேவையின் முக்கிய இயக்கிகளாக மத்திய வங்கிகள் மற்றும் தங்க பரிவர்த்தனை வர்த்தக நிதி (இடிஎஃப்) முதலீட்டாளர்கள் தொடருவார்கள். புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் தங்கத்தின் விலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதேசமயம், மத்திய வங்கிகளின் நடவடிக்கைகள் தங்க சந்தையை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை போக்கு எப்படி இருக்கும் என்று மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் கணித்துள்ளது. மோதிலால் ஓஸ்வால் பிரைவேட் வெல்த் அறிக்கையின்படி, 2024ம் ஆண்டில் தங்கம் ஆண்டுக்கு 21 சதவீத வருமானத்ததுடன் சிறந்த செயல்திறன் கொண்ட சொத்து வகைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. விலை உச்சத்தில் இருந்ததால் நகை தேவையை பாதித்தது, அதேசமயம் தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான முதலீட்டுத் தேவை வலுவாகவே இருந்தது. விலை அதிகமாக இருந்ததால் கடந்த ஆண்டில் தேவை குறைந்தது. இருப்பினும், திருமண சீசன் கொள்முதல் (தங்கநகைகள் வாங்குவது) காரணமாக ஜனவரி நடுப்பகுதி முதல் தங்க தேவை படிப்படியாக மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த மீட்சியில் விலை நிலைத்தன்மை ஒரு முக்கிய காரணியாக இருக்கும்.