
தமிழ் சித்தர் மரபின் தலைவன், பட்டினத்தார் மூலம் அறியேன் முடியும் முடிவறியேன், ஞாலத்துள் பட்டதுறர் நாட நடக்குதடா… என்று வாழ்வின் ரகசியத்தை பாமரமொழியில் பாடிச்சென்ற மகத்தான ஆன்மீக மனிதர்.
பட்டினத்தாரைப் பற்றி அவ்வளவாக நம்மிடம் வரலாற்றுக்குறிப்புகள் இல்லை. இருக்கும் குறிப்புகளின் படி, இரண்டு பட்டினத்தார்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். ஒருவர் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் அதிகம் பக்திமரபு சார்ந்து இயங்கியிருக்க வாய்ப்பதிகம் என்கிறார்கள், ஆய்வாரள்கள். இரண்டாமவர் தான் நாம் இப்போது போற்றும் பட்டினத்தார். தோராயமாக, 14ம் நூற்றாண்டில் இந்த பட்டினத்தார் தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எப்படியிருந்தாலும், பெயரில் அல்ல, உயிரை உருக்கி எழுதிய பாடல்களிலேயே வாழ்கிறார் பட்டினத்தார்.
பட்டினத்தாரை எந்த மரபில் சேர்ப்பது? மாமாயை என்னும் வனத்தில் அலைகிறேன்டா… என்ற வரிகள் ரத்தத்தை இறுக்கி சித்தத்தை அடக்கி மொத்தத்தை உணர்த்துணியும் வெறிகொண்ட தவசீலர்களுக்கு மட்டுமே சாத்தியம். அப்படிப்பார்த்தால் அவர் தவசீலர் ‘மண்ணாசை பட்டேனை மண்ணுண்டு போட்டதடா’ என்று பாடும்போது, அவர் வெறும் சுடுகாட்டுப் பித்தன். ‘காமக்குரோதம் கடக்கேனே என்குதே… அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே… நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே…’ என்று பாடும்போது, அவர் உணர்வுகளை அடக்கத்துடிக்கும் சாதாரண குடியானவன். ‘மனுவாதி சக்தி வலையில் அகப்பட்டனடா…’ என்று பாடும்போது, அவர் சமூகநிலையை சாடியெழும் சீர்திருத்தவாதி. இப்படி நிறைய மரபுகளில் அவரைச் சேர்க்கலாம். சந்தேகமே இல்லை… பட்டினத்தார் தமிழ் இனத்தின் மாபெரும் தன்னொளியர்.
ஆன்மீகத்தின் மொத்த சாரமும் ‘நிலையாமை’ எனும் வார்த்தையிலேயே அடங்கியீருக்கிறது. இம்மண்ணில் தோன்றிய எல்லா ஆன்மீகவாதிகளும், அந்த நிலையாமை எனும் வாரத்தையை புரிந்துகொள்ளவே முயற்சி செய்தார்கள். தெற்கே நீர்சூழ்ந்த ராமேஸ்வரமும், வடக்கே தீ சூழ்ந்த வாரணாசியும் யாது? எல்லாம் நிலையாமையை உணர்த்துபவையே. இதை பட்டினத்தார் மிக அழுத்தமாக பாடல்களில் பதிவு செய்தார். ஒரு பாடல் ‘நீர்க்குமிழியாம் உடலை நித்தியமாய் எண்ணுதே…கண்ணுக்கு கண்ணெதிரே கட்டையில் வேக்கண்டும் எண்ணும் திரமாய் இருப்போம் என்றெண்ணுதே…’ என்று பாடுகிறார் பட்டினத்தார். அதைக் கேட்கும் போது, கண்டிப்பாய் உலகசுகங்களை நாம் வெறுக்கப்போவது உறுதி.
பட்டினத்தாரின் முக்கிய அம்சம், அவர் அரசர்களை பாடிய கவி அல்ல, சாமானியர்களை பாடிய கவி என்பது. இரண்டாம் அருட்புலம்பலில் வரும் காதலி காதலனை நினைத்து உருகும் அத்தியாயம், சிலப்பதிகாரத்துக்கு இணையான அடர்த்தி கொண்டது. அதுவும், சிலப்பதிகாரம் போல இது ‘காதலனே சகலமும்’ என்று அடிபணிந்து பாடுவதாக இருப்பதில்லை. மாறாக காதலி காதலனை திட்டுகிறாள். அவன் தனித்துவிட்டுப்போனதை எண்ணி அவன்மேல் தீச்சொல்லிடுக்றாள். ‘அழித்தாண்டி, குலைத்தாண்டி, விட்டுப்போனாண்டி…’ என்று சொல்லெடுத்து அறைகிறாள். கடைசியில், தன்னையெறிந்தேண்டி தனிக்குமரியானேண்டி, தன்னந்தனியே தனியிருக்க பக்குவமே…; என்று வாழும் தைரியத்தை அடைந்து நிற்கிறாள்.
ஞானிக்கு பணம் வெறும் காகிதம், தங்கம் வெறும் உலோகம், வைரம் வெறும் படிகம், பட்டினத்தாருக்கும் அவை அப்படியே தோன்றின.
பெரும் அரசர்கள் அவரைக்கண்டு, ‘பொன் அளிக்கிறேன்;.. பொருள் அளிக்கிறேன்..’ என்று ஆசைகாட்டிய போதெல்லாம், செல்வத்துக் களித்தனை தரித்திரத்து அழுங்கினை, சுவர்க்கத்து இருந்தனை நரகத்து கிடந்தனை…’ என்று சொல்லி மறுக்கிறார். அதாவது ‘செல்வமே பெரிய தரித்திரமென உணர்…. அது சொர்க்கமென காட்சியளிக்கும் நரகம்’… என்று அரசர்களுக்கு உணர்த்துகிறார். கடைசிவரை அவர் கையில் கலமேந்தி பிச்சையுண்டு மானுடர்களுக்கு அருள் போதித்தார் என்றே வரலாறு கூறுகிறது.
புத்தமரபின் மிகப்பெரிய அடையாளம், யிங் யாங். அதாவது, நன்றென்றும் தீதென்றும் இங்கு எதுவுமில்லை. எல்லாமே ஒரு சுழற்சி தான் என்று உணர்த்தும் வட்டவடிவச் சின்னம், அது. அதைப்போல ஆயிலம் வரிகளை நம்மால் பட்டினத்தாரின் பாடல்களில் காணமுடியும். ஒரு உதாரணம் கோயில் திருஅகவலில் வருவது ‘பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும், தோன்றின மறையும் மறைந்தன தோன்றும், பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும், உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும், புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்…’ என்று பாடுகிறார் பட்டினத்தார். பொதுவாக பட்டினத்தாரின் துறவை புத்தரின் துறவோடு ஒப்பிடுவார்கள். அதோடு பட்டினத்தாரின் ஞானத்தையும் புத்தரின் ஞானத்தோடு ஒப்பிடவேண்டும் அதுவே சரி.
எல்லாவற்றுக்கும் மேயே, மரணமே நிரந்தரம், ‘அழியேன்…’ என்று இவ்வுலகில் எந்தக்கொம்பனும் சொல்லமுடியாதபடி, அவனை காலத்தோடு கட்டிநிறுத்தியிருக்கும் மாவடிவம் அது. இருந்தும், அடைய நினைக்கிறான் மானிடன். அடைந்து சேர்க்க நினைக்கிறான். ஆனால், துறவுபூண்டோன் மரணத்தையும் கடந்து வெல்கிறான். கண்மூடிய இருளுக்குள் எரியும் ஒற்றை ஒளியை மட்டும் துணையெனக் கொண்டு அவன் அதை சாதிக்கிறான். அவனுக்கு உறவுகள் சருகுகள், நட்புகள் நார்கள் என்று பட்டினத்தார் பாடுகிறார்;.. ‘என்பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார், பொன்பெற்ற மாதரும் ‘போ மென்று சொல்லிப் புலம்பிவிட்டார், கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார், உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே, அந்த உடையவன் என்பது எந்தக் கடவுளும் அல்ல. வெறும் ஒளி. ஒளி மட்டுமே.
ஆன்மீகம் மூன்று வழிகளில் இயங்குகிறது. ஒன்று பக்தி இரண்டு, வழிபாடு. மூன்று,தத்துவம். இதில் பக்தியையும் வழிபாட்டையும் போற்றும் நாம் தத்துவத்தைப் போற்றுவதில்லை. அதை பட்டினத்தார், இ’எட்டுத்திசையும், பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டித்ததும்பி முளைத்தோங்கும் சோதியை மூடரெல்லாம் கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர், கருத்தில் வையார்’ என்று எள்ளிநகையாடுகிறார். தத்துவத்தை மறந்து பக்தியை மட்டும் பிடித்தலையும் சாமானியர்களை நோக்கி, பட்டப்பகலை இரவென்று கூறிடும் பாதகரே..’ என்ற உவமையை பயன்படுத்துகிறார், பட்டினத்தார்.
பட்டினத்தார் கரும்போடு நிற்பதே நாம் எப்போதும் காணும் புகைப்படம் ஆனால், அவர் கரும்பை பிடித்திருந்தது கையில் அல்ல. நாவில், பெருகுக அடிகளின் புகழ், பரவுக அவர்தம் அனல்.