
ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், போர் நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. அதோடு உக்ரைனுக்கு உதவிகளை வழங்கின. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து வந்தது உக்ரைன்.
இன்று சவுதி அரேபியாவில் அமெரிக்கா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை என்பது நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தை என்பது சவுதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜெட்டாவில் வைத்து நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரி 18ம் தேதி நடந்த போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா – ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் இந்த முறை அமெரிக்கா – உக்ரைன் பேச்சுவார்த்தை ஜெட்டா நகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா மற்றும் உக்ரைன் சார்பில் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்கு சவுதி அரேபியா மத்தியஸ்தம் செய்கிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைனுக்கு வழங்கிய உதவிக்கு கைமாறாக அந்த நாட்டின் கனிமவளத்தை அமெரிக்கா பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
அதேபோல் ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் உக்ரைனின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக அமெரிக்கா உறுதியளிக்கும் வகையில் ஒப்பந்தம் என்பது கையெழுத்தாக உள்ளது. முன்னதாக இந்த பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்றைய தினமே சவுதி அரேபியா சென்றார். அங்கு அவர் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். இந்த மீட்டிங் நல்லபடியாக முடிந்தது என்று ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் டிமைட்ரோ லைட்வின் தெரிவித்தார்.

அதேபோல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் 2மணி நேரம் சந்தித்து பேசினர். இந்த மீட்டிங்கில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் பங்கேற்றார்.