
ரயில் டிக்கெட்டினை ஐஆர்சிடிசி வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஆன்லைனில் டிக்கெட் வாங்குவதற்கும் கவுண்டர்களில் சென்று டிக்கெட் வாங்குவதற்கும் நிறைய விலை வித்தியாசம் இருக்கிறது. நாம் நேரடியாக சென்று டிக்கெட் வாங்குவதை விட ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் வாங்கும்போது சற்று அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது.
இந்த நிலையில் மாநிலங்களவையில் ரயில் டிக்கெட் கட்டணம் குறித்து எம்பி சஞ்சய் ராவத் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். அதில் நேரடியாக டிக்கெட் வாங்குபவர்களை விட ஐஆர்சிடிசி வழியாக ஆன்லைனில் டிக்கெட் வாங்குவதற்கு பயணிகள் அதிக கட்டணம் செலுத்துகின்றார் இந்த விலை வேறுபாட்டிற்கு பின்னால் என்ன காரணம் என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள ரயில்வே துறை அமைச்சர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்குவதற்கு கன்வீனியன்ஸ் கட்டணம் மற்றும் பரிவர்த்தனை கட்டணம் என இரண்டு கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. இதுதான் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் விலை சற்றே அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது என கூறியுள்ளார். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு வசதி இருப்பதால் மக்கள் ரயில் நிலையங்களுக்கு சென்று கவுண்டர்களில் நீண்ட நேரத்தை செலவிட வேண்டிய அவசியம் இல்லை. இதனால் பயணிகளின் நேரமும் போக்குவரத்து செலவும் மிச்சமாகிறது.

அதேவேளையில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதிகளை வழங்குவதற்கு ஐஆர்சிடிசி சில செலவை செய்ய வேண்டி இருக்கிறது. டிஜிட்டல் ரீதியிலான அந்த கட்டமைப்பை பராமரிப்பதற்கான செலவு ஆகியவற்றை ஈடு செய்வதற்காக கன்வீனியன்ஸ் கட்டணம் என்பதை வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என கூறினார். தற்போது முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை ஆன்லைனில் தான் முன்பதிவு செய்யப்படுகின்றன எனவும் அமைச்சர் கூறியுள்ளர்.