ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 23-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த சீசனில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பஸ்களில் கட்டணம் ஏதும் செலுத்தாமல் பயணிக்கலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. போட்டி முடிந்து ரசிகர்கள் பாதுகாப்பாக செல்வதற்காக கூடுதலாக 90 நிமிடங்களுக்கு மெட்ரோ சேவைகள் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான நித்திஷ் குமார் ரெட்டி, வயிற்று பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் 2-வது ஆட்டத்தில் விளையாடவில்லை. இதன் பின்னர் அந்த தொடரில் இருந்து முழுமையாக விலகிய அவர், பெங்களுருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்றார். தொடர்நது யோ-யோ உள்ளிட்ட உடற்தகுதிக்கான சோதனைகள் அனைத்தையும் அவர், நிறைவு செய்துள்ளார். உடற்பயிற்சி நிபுணர்களும் அவருக்கு பச்சை கொடி காட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் விரைவில் இணைய உள்ளார். இந்த சீசனுக்காக ஹைதராபாத் அணி அவரை ரூ.6 கோடிக்கு தக்கவைத்திருந்தது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பயனுள்ள வகையில் சில பங்களிப்புகளை நித்திஷ்குமார் ரெட்டி கொடுத்திருந்தார். மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் அவர், 114 ரன்கள் விளாசி கனவம் ஈர்த்திருந்தார். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தனது சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது.