22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

ஜி.வி. பிரகாஷின் 25வது திரைப்படமாக உருவாகியுள்ளது  கிங்ஸ்டன். அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ் இயக்கிய இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து ஜீ  நிறுவனம் தயாரித்துள்ளது. திகில் கலந்த ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம், எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. 

தூவத்தூர் கடல் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்க போனால் பிணமாக மட்டுமே திரும்பி வருகிறார்கள். கிராமத்துக் கன்னிப் பெண்களும் அவ்வப்போது மாயமாகி பிணமாகின்றனர். அதற்கு என்ன காரணம்? உள்ளுர் தாதா தாமஸிடம் (ஷிபுமோன்) மீனவராக பணியாற்றும் நாயகன் கிங் (ஜீ.வி.பிரகாஷ்குமார்) அதைக் கண்டுபிடித்து என்ன செய்கிறார் என்பது கதை.


ஊரில் யாருக்கு என்ன என்றாலும் பணத்தை அள்ளிக்கொடுக்கும் தாமஸ் கதாபாத்திரத்தின் தன்மை, கடல் அட்டை என்ற பெயரில் அவர் நடத்தும் கடத்தல் நாடகம், சர்வ வல்லமை பொருந்திய தாதாவை, ஹீரோவும் அவர் நண்பர்களும் என்ன செய்வார்கள் என்பது உள்ளிட்ட எளிதாக யூகிக்கக் கூடிய பல கட்சிகள் கதைக்குள் இழுக்க மறுக்கின்றன. பிளாஷ்பேக்கில் வரும் கிங்ஸ்டனின் தாத்தா சாலமன் (சேத்தன்) –போஸ் இடையேயான தங்கக் கடத்தல் எபிசோடும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.


கிங்ஸ்டன் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். அவர் காதலியாக வரும் திவ்யபாரதி, வழக்கமாக நாயகிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை செய்திருக்கிறார். சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் வில்லத்தன நடிப்பில் கவர்கிறார் சேத்தன். அழகம்பெருமாள், ஷபு மோன், குமரவேல், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கிறார்கள்.


கடலுக்குள் நடக்கும் அமானுஷ்யங்கள், சாகசங்கள் அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்களுக்குப் படபடப்பையும் பயத்தையும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பையும் அக்காட்சிகள் இயல்பாகத் தருகின்றன. அந்த இடத்தில் வரும், அட்டகாசமான விஷ_வலும் கிராபிக்ஸ் காட்சிகளும் பின்னணி இசையும் இணைந்து பிரமிக்க வைக்கின்றன. ஆனால், குழப்பமான திரைக்கதை, கதையைப் புரிந்து கொள்வதில் சிக்கலைத் தருவதால் அந்த பிரமிப்பைக் கடைசிவரை கொண்டு செல்ல தவறியிருக்கிறது, படம்.