22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

(Part 2)

அர்ஜென்டினாவில் 1930ல் ஏற்பட்ட புரட்சியின் பின்விளைவாக பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அர்ஜென்டினாவிலிருந்து மாட்டிறைச்சி, கோதுமை முதலியவை ஐரோப்பியாவிற்கு ஏற்றுமதியை மையமாக உற்பத்தி நடைபெற்றது. உள்நாட்டில் மக்களுக்கு தேவையான பொருட்கள் கடுமையாக விலையேறியது. பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தங்களது வாழ்விற்காக வேலை தேடி நகரங்களுக்கு குடிப்பெயர்ந்தனர். புயெனெஸ் எயர்ஸ்ல் மட்டும் சுமார் 1.4 மிலிலியன் பேர் கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தார்கள். ஏழைகள் நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் மத்தியிலான இடைவெளி அதிகரிக்க துவங்கியது. பாதிப்புக்குள்ளான மக்கள் சமூகபோராட்டங்கள், கருத்தியல் அடிப்படையில் அணிசேர்வது என அல்டா கிரேசியாவின் கலாச்சாரச் சூழலும் மாறியது. இதன் தாக்கம் ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டதுஅவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு மாற்றம் அடிக்கடி நடந்தது. சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு இடம் விட்டு இடம் மாறுவது என்பது பழக்கமாகிவட்டது.


அவர்கள் வசித்த வீடு கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரமானது. உடல்நிலைக்கு ஏற்ற சுத்தமான, மெல்லிய இதமான தென்றலில் இனிமையான கால நிலையுள்ள சிறிய நகரம் தான் அல்டா கிரேசியா. தந்தையார் அந்த நகரின் பணக்கார மத்தியதர குடும்பத்தினர்களுக்கு வீடுகட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். ஏர்னெஸ்டோவின் தந்தையார் மிகவும் நட்பாகவும் பொறுப்புடனும் பழகக்கூடியவர். கடினமான வேலை செய்துகொண்டிருந்தாலும் அவர் குழந்தைகளை பாசமுடன் கவனித்தார்.


ஏர்னெஸ்டோவுடன் நீச்சல், கோல்ப் விளையாடுதல் என இனிமையாக தனது ஓய்வு நேரங்களை செலவிட்டார். ஏர்னெஸ்டோவுக்கு தனது செல்ல நாயின் முதுகில் அமர்ந்து விளையாடுவது, உடன்பிறந்தவர்களுடன் விளையாடுவது என குழந்தைப்பருவம் இனிதாக இருந்தது. தொடர்ந்த மருத்துவம், இதமான சூழல், அன்னையின் அரவணைப்பு அனைத்துமாக ஏர்னெஸ்டோவின் குழந்தைப்பருவம் நகர்ந்தது. மற்ற எல்லா குழந்தைகளையும் விட அன்னையின் அரவணைப்பும் பரிவும் ஏர்னெஸ்டோவுக்கு அதிகமாகவே அமைந்தது. அன்னையின் அன்பான பார்வையில் விளையாட்டு கரங்களை பிடித்தபடியே அன்னையுடன் உலா வருவது என இருவருக்குமிடையே பாசப்பிணைப்பு அதிகமாக இருந்தது. புத்தகம் படிப்பது என்பது ஏர்னெஸ்டோவுக்கு 9 வயது வரை தாயின் கவனிப்பில் படிப்பு வீட்டிலேயே அமைந்தது. தாயின் மடியில் அமர்ந்தவாறு எழுதிப்படிக்க தொடங்கினார் ஏர்னெஸ்டோ. 2வது மற்றும் 3வது வகுப்புகள் மட்டுமே முறையாக பள்ளிக்கூடத்தில் கற்றார். அவரது உடன்பிறந்தவர்கள் 5வது 6வது வகுப்பறை பாடங்களை எழுதிக்கொண்டுவந்து கொடுக்க வீட்டிலிருந்தவாறு படித்துவந்தார்.


ஆஸ்துமாவை எதிர்கொள்ள மனபலம் அவசியம் என்பதையுணர்ந்த அவரது பெற்றோர் அதற்கான உடற்பயிற்சிகள் கற்றுக்கொடுத்தனர். மலையேறுதல், ஓட்டப்பயிற்சி, நீச்சல், குதிரையேற்றம் என பயிற்சிகள் வழியாக ஒரு அசாதாரணமான மனதிடனை சிறுவயதிலேயே பெற்றிருந்தார். உடல் பலவீனத்தை எதிர்கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் அவரை ஒரு ஆளுமை மிக்கவராக வளர்த்தது. அந்த சிறு வயதிலேயே பல தரப்பட்ட மக்களிடம் குறிப்பாக தன்னையொத்த வயதினரிடம் பழகியதில் ஏர்னெஸ்டோவுக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். கட்டிட வேலை செய்த உதவியாட்களின் பிள்ளைகள் முதல் நடுத்தர வீட்டுபிள்ளைகள் வரை அனைவரிடமும் தொடர்புகள் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. அவர்களிடம் பழகுவதோ நட்புடன் விளையாடுவதோ அவருக்கு கடினமாக இல்லை.

சிறுவயதிலேயே அவரிடம் தலைமைக்கான ஆளுமை இருந்தது. அல்டா கிரேசியாவின் சிறுவயது நண்பர்கள் மத்தியில் ஏர்னெஸ்டோ தனித்தன்மையுடன் இருந்தார்.
லத்தீன் அமெரிக்காவில் புகழ் வாய்ந்த விடுதலைக் கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதைகள், ஸ்பானிய கவிதைகள், கதைகள் என பலவிதமான புத்தகங்கள் படித்தார். ஸ்பெயினிலிருந்து மாமா அனுப்பிய செய்தி ஏடுகள், புத்தகங்களில் யுத்தச் செய்திகளை படிப்பது சிறுவயதில் ஏர்னெஸ்டோவுக்கு விருப்பம். ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம் சிறுவயது ஏர்னெஸ்டோவிற்குள் மாற்றங்களை உருவாக்கியது. மாட்ரிட், டெருயெல், குயுரென்சியா நகரங்களின் வீரம் செறிந்த இராணுவ போராட்டங்கள் அவரை வெகுவாக கவர்ந்தது. அவரது அறையில் ஸ்பெயின் நாட்டு வரைபடம் வைத்து அதில் படைகளை நகர்த்தி விளையாடினார். வீட்டு தோட்டத்தில் யுத்தகளங்கள், பதுங்குகுழிகள் மலைகள் அமைத்து வைத்திருந்தார் சிறுவயது ஏர்னெஸ்டோ.


பத்திரிக்கைக்கு யுத்தச்செய்திகள் சேகரித்து வந்தார். அதனால் சிறுவயதிலேயே யுத்தம் சம்பந்தமான நேரடி செய்திகளை மாமாவிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டார் ஏர்னெஸ்டோ. அதுதான் ஏர்னெஸ்டோவின் அரசியல் பாடத்தின் துவக்கம். அங்கிருந்து துவங்கிய இந்த அலை அவரை சமூகத்தின் அவலங்களை தேடவைத்தது.
அர்ஜென்டினாவில் ஏர்னெஸ்டோ இப்படி வளர்ந்து கொண்டிருக்கையில், கியூபா வில் பாட்டிஸ்டா அதிகாரத்தை கைப்பற்றியதன் பின் அமெரிக்க வல்லரசு பாட்டிஸ்டாவின் எதிராளிகளை சரிகட்டி அமெரிக்க நிறுவனங்களை அங்கே நிறுவ ஆரம்பித்தது. இடைக்கால அதிபராக இருந்த ரமோன் கிரயு சன் மார்டினுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு, புதிய அதிபராக கார்லோஸ் மெண்டியெட்டா அமர்த்தப்பட்டார். அமெரிக்கா இந்த புதிய அரசை உடனடியாக அங்கீகரித்தது. மே 29, 1934 குயான்றனாமோ பே தீவை பயன்படுத்தி உடன்படிக்கையை கியூபாவுடன் ஏற்படுத்தியது அமெரிக்கா. அன்று முதல் இன்று வரை அந்த தீவு அமெரிக்காவின் வசம்.


தொடர்ந்து வந்த அமெரிக்க ஆதரவு பாட்டிஸ்டாவை பலம் மிக்கவராக மாற்றியது. பாட்டிஸ்டா பல நிழல் உலக வர்த்தக பிரமுகர்களுடன் தொடர்பை வழுப்படுத்தினார். இந்த தொடர்புகள் வழியாக பல சூதாட்ட விடுதிகள் ஹவானாவில் திறக்கப்பட்டது. அமெரிக்க நிறுவனங்களுக்கு பாட்டிஸ்டா அதிகாரத்திலுள்ள நண்பனாக இருந்தார். அரசு நிர்வாகம் வஞ்சமும், ஊழலுமாக மக்களுக்கெதிராய் நடந்துகொண்டிருந்தது. மாணவர்களும், பொதுவுடமையாளர்களும் எதிர்ப்புகளை காட்டிய வண்ணமிருந்தனர். பல எதிர்பாலர்கள் கொலை செய்யப்பட்டனர். பாட்டிஸ்டாவை கொல்லவும் முயற்சிகள் நடந்தன. மாணவர் தலைவர் ஒருவர் எழுதிய கடிதத்தில் பாட்டிஸ்டா பற்றி ‘புரட்சி என ஒன்று நடந்தால், தான் தப்பிச் செல்ல விமானம் ஒன்றை தயாராக வைத்திருக்கும் குணமுடையவர்’ என்றார். கியூபாவில் அதிபருக்கான தேர்தலும் வந்தது. உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பிய அந்த சரித்திர மனிதன் யார்? கியூபாவில் சன் மார்டின் அதிபராக பதவியேற்ற போது பிடல் காஸ்ட்ரோ இயேசு சபையினர் நடத்திய உயர்நிலைப் பள்ளி அளவிளான கியூபாவின் சிறந்த விளையாட்டு வீரராக காஸ்ட்ரோ தேர்வு செய்யப்பட்டார். தன்னம்பிக்கையும், இலட்சிய உறுதியும் மிக்க காஸ்ட்ரோ பள்ளிப் படிப்பை முடித்து 1945 ஹவானா பல்கலைக்கழகத்தில் பயில துவங்கினார். மாணவப் பருவத்திலேயே அரசியல் நடவடிக்கையில் ஆர்வம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ ஏப்ரல் 8 1948 ல் கொலம்பியா நாட்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சியில் கலந்துகொண்டார்.


கியூபாவில் சன் மார்டின் ஆட்சியின் முதற் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அமைந்தாலும் பின்னர் நிழல் உலக தாதாக்களின் குழப்பங்கள் அதிகமாகவும் இருந்தது. இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்ட நிழல் உலகம் சார்ந்தவர்கள் ஹவானாவில் நேசனல் விடுதியில் இரகசிய கூட்டம் நடத்தி படுகொலைகளுக்கு திட்டமிட்டது வாடிக்கையானது. தொடர்ந்து நடந்த தேர்தலில் 1948 அக்டோபர் மாதம் கார்லோஸ் ப்ரியோ சொக்கரஸ் வெற்றி பெற்றுஅதிபரானார். பாட்டிஸ்டா, லஸ் வில்லாஸ் பகுதியிலிருந்து கியூபாவின் செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

தொடரும்……..