
(Part 3)
யுத்தத்தின் காரணமாக ஸ்பெயினிலிருந்து மருத்துவர் ஜூயன் கொன்சலெஸ் அகுலர் குடும்பத்தினர் 3 குழந்தைகளுடன் அர்ஜெண்டினாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் ஏர்னெஸ்டோவின் அண்டை வீட்டில் குடியிருந்தனர். ஏர்னெஸ்டோவீட்டிலிருந்து சுமார் 35 கி.மீட்டர் தொலைவில் இருந்த பள்ளியில் ஏர்னெஸ்டோவும் அந்த 3 குழந்தைகளும் சேர்ந்து படித்து வந்தனர். இரு குடும்பத்தினருக்குமிடையே நெருக்கமான உறவு இருந்தது. மருத்துவர் ஜூயனும் அவரது குடும்பத்தினரும் பகிர்ந்துகொண்ட ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டு யுத்த அனுபவங்கள் ஏர்னெஸ்டோவுக்குள் விடுதலைக்கான விதையை சிறுவயதில் விதைத்திருந்தது.
பெற்றோர் அரசியல் சூழல் பற்றிய கருத்துக்களை இளம் ஏர்னெஸ்டோவுடன் பகிர்ந்து வந்தனர். ஏர்னெஸ்டோவை பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் இளையோர் அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்தனர் அவரது பெற்றோர். மனான அசியன் அரஜெண்டினா என்ற இந்த இயக்கத்தின் கிளையை அந்த பகுதியில் நிறுவியது ஏர்னெஸ்டோவின் தந்தையார். அப்போது ஏர்னெஸ்டோவுக்கு வயது 11. அரஜெண்டினாவில் நாஜிகள் ஊடுருவலை தடுக்க கூட்டங்கள், நிதிசேகரிப்பு என பலவிதமான நடவடிக்கைகளில் ஏர்னெஸ்டோ பங்கெடுத்தார். அர்ஜெண்டினாவில் ஏற்ப்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் பிரதிபலிப்பு ஏர்னெஸ்டோவின் குடும்பத’திலும் காணப்பட்டது தனது 16 வயதில் பாப்லோ நெருடாவின் கவிதைகளால் கவரப்பட்டார் ஏர்னெஸ்டோ இளம் வயதிலேயே கார்ல் மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ படித்திருந்தார் ஏர்னெஸ்டோ.
சொல், ரோஜா நிர்வாணமானதா
இல்லை அது தான் அதன் ஆடையா?
மரங்கள் ஏன் மறைக்கின்றன
வேரின் மகிமையை?
யார் கேட்கிறார்கள்
களவாடிய வாகனத்தின் வருத்தத்தை?
உலகில் துக்கம் மிகுந்தது எது
மழையில் நனைந்தபடி நிற்கிற புகைவண்டியை விட?
பாப்லோ நெருடா.
ஏர்னெஸ்டோவின் தந்தையருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் காதல் ஏற்ப்பட்டது. ஒருமுறை அந்த பெண்மணியை வீட்டிற்கு அழைத்து வந்து அறிமுகம் செய்தார் தந்தையார், இது விசயமாக ஏர்னெஸ்டோ மிகவும் கோபமடைந்திருந்தார். அந்த பெண்ணின் பெயரை கேட்டாலே அவரை கோபம் கொள்ள வைத்தது. இந்த நிகழ்வுகள் ஏர்னெஸ்டோவை அவரது தாயாருடன் மிகவும் நெருக்கமடைய வைத்தது.
ஆஸ்துமாவின் தாக்குதலாலும் குடும்பத்தில் ஏற்ப்பட்ட மாறுதல்களாலும் ஏர்னெஸ்டோ ஒரு சராசரி மாணவனாகவே திகழ்ந்தார். மனிதவியல் மற்றும் தத்துவ பாடல்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றார் ஏர்னெஸ்டோ. ராகத்திற்கும் தாளத்திற்குமுள்ள வேறுபாடு தெரியாதவதாகவே வளர்ந்தார். நடனமாடவோ இசைக்கருவிகள் மீட்டவோ தெரியாதவராக இருந்தார்.
சிறுவயதிலேயே பரந்த மனதுடன் அவர் வாழ்ந்த கொர்டொபா வாழ் ஏழைகளுக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளியை அகற்றவும், அடக்குமுறைகளையும் அநீதியையும் எதிர்க்க கடுமையாக முயன்றார். லத்தீன் அமெரிக்காவின் பிற பகுதிகளைப்போல அங்கு புறக்கணிக்கப்பட்டவர்களும், இடம்பெயர்ந்தோரும் தகரத்தையும் அட்டைப்பெட்டிகளையும் அடைத்த வீட்டில் வாழ்ந்தனர். கால்களை இழந்த ஒருவர் அந்த பகுதியில் நாய்கள் இழுக்கிற வண்டியில் பொருட்களை வைத்து விற்று வந்தார். அவரது வீட்டிலிருந்து வீதிக்கு வரும் வழியில் ஒரு பள்ளத்தில் வண்டியை இழுக்க நாய்கள் சிரமப்படுவது வழக்கம்.
அந்த மனிதர் அவ்வேளைகளில் நாய்களை அடித்து துன்புறுத்தி நடைபாதையில் வண்டியை செலுத்துவார், இது அந்த பகுதி மக்களை எரிச்சலடைய செய்த அன்றாட நிகழ்வு. ஒரு நாள், அந்த பகுதி குழந்தைகள் அந்த மனிதர் மீது கற்களை வீசினார்கள். ஏர்னெஸ்டோவும் அவரது நண்பர்களுடன் அந்த காட்சியை கண்டு, குழந்தைகளிடம் தாக்குதலை நிறுத்த அறிவுறுத்தினார். ஆனால் நன்றி சொல்வதற்கு பதிலாக அந்த மனிதர் ஏர்னெஸ்டோவை வசைபாடி அவர் மீது பணக்காரர்கள் மீதுள்ள வெறுப்பை உமிழ்ந்தார். இந்த நிகழ்வு தன்னை தாக்குகிற ஏழை குழந்தைகள் எதிரிகளல்ல மாறாக தன்னை பாதுகாக்க முயல்கிற பணக்கார குழந்தைகளே என்ற ஒரு அரிய பாடத்தை கற்றுத் தந்தது.

பொறியியல் படிக்க திட்டமிட்டதை மாற்றி 1947ல் புயெனெஸ் எயர்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவ துறையில், தொழுநோய் பற்றி சிறப்பு பாடமாக படித்தார் ஏர்னெஸ்டோ. கல்லூரியில் செயல்பட்ட புரட்சிகர மாணவர் இயக்கத்தில் ஏர்னெஸ்டோ பங்கெடுக்கவில்லை. படித்தவாறு ஒரு மருத்துவமனையில் பகுதி நேர வேலையும் செய்துவந்தார். கல்லுரியில் படித்து வந்த காலங்களில் தனக்கு பிடித்தமான ரக்பி விளையாட்டு விளையாடுவதில் அதிகமான நேரத்தை செலவிட்டார் ஏர்னெஸ்டோ. ரக்பி விளையாட்டு அவருக்கு உடல் வழுவையும் திட்டமிடும் கலையையும் உருவாக்கியது. இருந்தாலும் ஆஸ்துமா கொடுத்த தொந்தரவால் விளையாட்டு களத்திலிருந்து அடிக்கடி வெளியேறி தனக்குத்தானே ஊசி மருந்தை செலுத்துவது ஏர்னெஸ்டோவுக்கு பழக்கம். விடுமுறை நாட்களில் ஏர்னெஸ்டோ மோட்டார் சைக்கிள் பயணங்கள் போவது வழக்கம்.
ஏர்னெஸ்டோவின் நண்பன் ஆல்பர்டோ கிரானடோ, அர்ஜெண்டினா, கொர்டொபாவில் மருந்துக்கடை வைத்திருந்தார். இருவருமான ஒரு வீடுமுறைநாளில் சந்தித்தபோது லத்தீன் அமெரிக்க முதல் வட அமெரிக்கா வரையிலான மோட்டார் சைக்கிள் பயணத்தை திட்டமிட்டனர். பயண திட்டத்தின் படி ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து 1 வருட விடுப்பில் டிசம்பர் திங்கள் 1951 இல் பொதெரோசரி என பெயரிடப்பட்ட நோர்டன் 500சிசி மோட்டார் சைக்கிளின் பயணம் கிளம்பினர்.
கியூபாவின் ஹவானாவில் படிப்பை முடித்த பின்னர் காஸ்ட்ரோ வழக்கறிஞராக ஹவானாவில் பணிபுரிந்தார். வழக்குகளுக்கான கூலியை கொடுக்க முடியாத ஏழைகளுக்கு வழக்கறிஞராக பணியாற்றியதால் காஸ்ட்ரோ வுக்கு அடிக்கடி பணப்பற்றாக்குறை ஏற்ப்பட்டது. ஏழைகள் படுகிற அவலங்களை வழக்குகளுக்காக வருபவர்களிடமிருந்து நேரடியாக தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படுகிற விதத்தில் நாட்டின் திட்டங்களும் அரசம் செயல்படுவதை காஸ்ட்ரோ புரிந்து கொண்டார்.
கியூபாவில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பற்றிய அறிவை காஸ்ட்ரோவுக்கு வழக்கறிஞரான அனுபவம் வழங்கியது. எல்லா கியூபா மக்களையும் போல அமெரிக்க வர்த்தகர்களின் பொருளாதார ஆதிக்கத்தையும் அதன் விளைவாக கியூபா அடிமையாவதையும் கண்ட காஸ்ட்ரோ வேதனையடைந்தார். இந்த அனுபவங்கள் காஸ்ட்ரோவை அரசியல் அரங்கில் அடியெடுக்க வைத்தது. அரசியல் பார்வை விரியப்பெற்ற காஸ்ட்ரோவுக்கு மக்களுக்காக பணிசெய்ய தூண்டிய அரசியல் தேலில் கியூபா மக்கள் கட்சியின் செயல்பாடு அதிகமாக பிடித்தது.
1947 ல் கியூபாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இளம் வயது காஸ்ட்ரோ வேட்பாலராக போட்டியிட்டார். கியூபா மக்கள் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே மிகவும் வலுவாக இருந்தது. தேர்தலில் கியூபா மக்கள் கட்சி வெற்றி பெற இருந்த சூழ்நிலையில் தேர்தலை நடத்த விடாமல் பாட்டிஸ்டா இராணுவத்தின் துணையுடன் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றினார். இதன் விளைவு கியூபாவின் வரலாற்றை மாற்ற வைத்தது.

அரஜெண்டினாவில் 4 ஜனவரி 1952 ல் புத்தாண்டு கொண்டாட்டம் ஓய்ந்த நிலையில் புயனெஸ் எய்ர்ஸ்லிருந்து லபேதரோஸ் என்ற 500சிசி நார்ட்டன் வகை மோட்டார் வாகனத்தில் ஏர்னெஸ்டோவும் அவரது நண்பர் ஆல்பர்டோ கிரனேடோவும் நீண்ட பயணத்தை துவங்கினர். பயணத்திற்கு முன்னர் நண்பர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட விருந்து நடந்தது. பயணம் புறப்பட்ட வேளையில் ஏர்னெஸ்மோவின் அன்னையார் சிசிலி அரவணைத்து தழுவி விடை கொடுத்தார். தாயும் மகனும் பிரியும் வேளை பாசத்தின் வெளிப்பாடாய் இருவரின் கண்களின் ஓரமாய் ஈரம் கசிந்த கண்ணீர். விடை பெற்று வீறிட்டுக் கிளம்பி காட்சியிலிருந்து மறையும் புள்ளியான வண்டியை பார்க்கையில் ஏர்னெஸ்டோவின் தாயார் தன்னம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட ஏர்னெஸ்டோ தொலைதூர பயணம் செல்கையில்தான் தெரிந்தது. அருகே இருந்த வேளைகளில் அன்னைக்கு ஆதரவாக இருந்த நேரங்களின் அருமை பிரிவில் தானே சேர்ந்திருந்த வேளைகளின் சிறப்பு தெரியும். இது தானே மானிட வாழவின் எதார்த்தம்.
ஏர்னெஸ்டோவைப் போல் ஆல்பர்டோவும் வாலிபத்தின் வேகமும் தேடலும் நிறைந்தவர். தென் அமெரிக்காவில் சிலி, பெரு, கொலம்பியா, வெனெசுவேலா நாடுகளுக்கும் இதன் பின்னர் வட அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தனர். ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து ஒரு வருடம் விடுமுறை பெற்றிருந்தார். முறையான திட்டமிடல் இல்லாமல் மிகவும் குறுகிய தகவல்களுடன் பயணம் துவங்கியது.
ஏர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி வேகமாக மனிதர்கள், மரங்கள், புல்வெளிகள், அழுத்தமான காற்று என காற்றில் பறக்கும் புரவியாக புயனெஸ் ஏர்ஸ் கடந்து சென்றது. காட்சிக்கு ஏற்ப கவிதை சிந்தனை என ஏர்னெஸ்டோவின் மனம் சிறகடித்தது. அட்லாண்டிக் கடற்கரையோரமாக வண்டி காற்றை துளைத்து இதமாக சென்ற வேளை, ஏர்னெஸ்டோவின் மனதை இயற்கை அழகை அள்ளி தனக்குள் மறைத்து வைத்திருக்கும் பெரும் சமுத்திரம் பல விதமான எண்ணங்களை மீட்டியது.
தொடரும்……….