22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

டிரம்பின் பொருளாதாரத் திட்டங்களில் வரிகள் ஒரு மையப் பகுதியாகும். வரிகள் அமெரிக்க உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் வேலைகளைப் பாதுகாக்கும், அத்துடன் வரி வருவாயை உயர்த்தி பொருளாதாரத்தை வளர்க்கும் என்று டிரம்ப் கூறுகிறார்.


2024-ஆம் ஆண்டில், சீனா, மெக்ஸிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் பொருட்கள், அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தன.


“சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்துவது மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த ஃபெண்டானின் உள்ளிட்ட பிற போதை பொருட்கள் நம் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பது குறித்து அவர்கள் அளித்த வாக்குறுதிகளுக்கு (மூன்று நாடுகளையும்) பொறுப்பேற்கச் செய்யும் வகையில் அதிபர் துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளார்” என புதிய வரிகளுக்கான திட்டங்களை டிரம்ப் முதலில் அறிவித்தபோது வெள்ளை மாளிகை தெரிவித்தது.


அதிகளவிலான போதை பொருட்களை எடுத்துக்கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் ஏற்படும் ஆயிரக்கணக்கான மரணங்களுடன் ஃபெண்டானில் தொடர்புடையதாக உள்ளது.


டிரம்ப் நிர்வாகம் இதற்கான ரசாயனங்கள் சீனாவிலிருந்து வருவதாக கூறுவதுடன், மெக்ஸிகோவைச் சேர்ந்த கும்பல்கள் அவற்றை சட்டவிரோதமாக வழங்கி, கனடாவில் ஃபெண்டானில் ஆய்வகங்களை நடத்துவதாக தெரிவித்துள்ளது.


அமெரிக்காவிற்கு ஃபெண்டானில் நுழைவதில், அவரது நாட்டின் பங்களிப்பு 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். மேலும் அதில் பெரும்பாலானவை மெக்ஸிகோவிலிருந்து வருவதாக அறியப்படுகின்றது.


வரிவிதிப்பில் நடப்பது என்ன?
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை பிப்ரவரி 4 அன்று தொடங்கியது.


பின்னர், 800 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள ஏற்றுமதிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார்.


பிப்ரவரி 10 அன்று சீனா தன் பங்குக்கு வரி விதித்து பதிலடி கொடுத்தது. சில அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு 10-15 சதவீத வரிகளை சீனா விதித்தது.


மேலும், பல்வேறு அமெரிக்க விமான போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை “நம்பிக்கையில்லா நிறுவனங்களின் பட்டியலில்” சேர்த்து, சீனா அவற்றுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


மார்ச் 4 அன்று, 10 சதவீத வரியை இரட்டிப்பாக்கி 20 சதவீதமாக அதிகரித்தது அமெரிக்கா. அதனைத் தொடர்ந்து, கூடிய விரைவில் பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியது.


“அமெரிக்கா வரிப்போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போரையும் தொடர்ந்து நடத்தினால், சீனா இறுதிவரை அவர்களை எதிர்த்துப் போராடும்” என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் எச்சரித்தார்.