22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

பஞ்ச பூதங்களே நம்மை ஆள்பவன. இறைவன் பஞ்ச பூதமாகவே இருந்து நம்மை வாழவைத்தக்கொண்டிருக்கிறார். இப்பஞ்ச பூதங்கள் இல்லை என்றால், உலகம் இயங்காது. உயிர்கள் கிடையாது. ஆனைத்திற்கும் மூலக் காரணமே இப்பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர் , நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகள்தான். இவற்றை சிறப்பிக்கும் வகையில் சிவபெருமான் ஐந்து திருத்தலங்களில், அந்தந்த பூதங்களாக அருளாட்சி செய்து வருகிறார். மண் தலமாகிய நிலத்திற்கு இரு தலங்களை குறிப்பிடுவார்கள். ஒன்று காஞ்சிபுரம், மற்றொன்று திருவாரூர். திருவாரூரில் பிறக்க முக்தி. தில்லையில் இருக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, திருக்காசியில் இறக்க முக்தி, என கூறப்படுகிறது. திருவாரூரில் பிறக்க முக்தி என்பது சைவ ஆன்றோர்களின் வாக்கு. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஆருர் அமர்ந்த அரசே போற்றி என நாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம். தமிழ்நாட்டில் மயிலாடுதுறை-நாகப்பட்டினம் மார்க்த்தில் 39கி.மீ. தூரத்தில் உள்ளது திருவாரூர். சென்னையில் இருந்து 314 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவாரூர்.


பஞ்ச பூத தலங்;களில் பூமி தலமாக விளங்கும் கோவில்:

சைவ சமயத்தின் பெரிய கோவில் என்றும் பூங்கோவில் என்றும் அழைக்கப்படுவதும், பஞ்ச பூத தலங்களில் பூமி தலமாகவும் விளங்குகிறது. திருவாரூர் தியாகராஜர் கோவில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகும். விடங்கள் என்றால் தானாக தோன்றும் சுயம்புலிங்கம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பாம்புப் புற்றை தான் எழுந்தருளியிருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுக் கொண்ட வன்மீகநாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம். இங்குள்ள இறைவனை வன்மீகநாதர், பற்றிடங்கொண்டார், தியாகராசர் என்றும் அம்பிகையை கலாம்பிகை, அல்லியகங்கோதை, நீலோத்பலாம்பாள் என்றும் போற்றப்படடுகிறது. லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமான இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறார். கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய கோவிலும், கமலாலயம் என்ற மிகப்பெரிய தீர்த்தக் குளமும் உடையது. இத்தலத்தின் விருட்சம் பாதிரி மரமாகும் . திருவாரூர் என்ற சொல்லுக்கு எங்கும் சிவ சொரூப திருவருள் கூடிய இடம் என பொருள்படும். இக்கோவில் மிகவும் பழமையானது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். தியாகராஜர் எனறால் கடவுளுக்கு எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.

சர்வ தோஷ பரிகாரத் தலமாக விளங்கும் திருவாரூர்:


திருவாரூரில் நவகிரகங்கள் ஒரே நேர்கேரட்டில் இருந்து இறைவனை வழிபடுவதாலும் திருவாரூர் கோவிலில் குடியிருந்து இந்த உலகுக்கு சிவபெருமான் அருள் புரிவதாக கருதப்படுவதாலும் இங்கு நவகிரகங்களால் எந்த தோஷமும் ஏற்ப்படாது எனக்; கூறப்படுகிறது. இத்தலம் சர்வ தோஷ பரிகாரத்தலமான விளங்குகிறது. சர்வ தோஷத்திற்கும் அக்கோவிலில் பரிகார பூஜைகள் செய்வதால் நவக்கிரக பாதிப்புகள் குறையும் என்பது ஐதீகம். இக்கோவிலில் மூலவர் வன்மீக நாதர், தியாகராஜர் என இருவருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.


பிரம்மாண்டமான ராஜ கோபுரங்கள்:

திருவாரூரில் தியாகராஜரின் முகத் தரிசனம் காண்பவர்கள், 3கிமீ. தோலைவில் உள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. திருவாரூர் கோவிலின் கிழக்கு கோபுரத்தின் உள்புரம் உள்ள ஆயிரம் கல் தூண்கள், முன் காலத்தில் திருவிழா காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் 9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள் 3நந்தவனங்கள், 3 மகப்பெரிய பிரபாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது) 100க்கு மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்ப்பட்ட உள் கோவில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது. இக்கோவிலின் கமலாம்பிகை கோபுரத்தின் உச்சியில் ஆகாச பைரவர் காவல் காத்து வருகிறார். இங்குள்ள பைரவர் எனப்படுகிறார். அம்மன் மூலஸ்தானம் அருகே வலது புறம் கமலமணி சித்தர் பீடம் உள்ளது. பிரகாரத்தில் மிகப்பெரிய சிவ சூரியன் அருள் பாலிப்பார். இங்கு அஷ்ட துர்க்கை சன்னிதிகள் உள்ளன. இந்த துர்க்கைகளையும், மகாலட்சுமியையும் முத்துசாமி தீட்சிதர் பாடியுள்ளார். திருவாரூர் என்றாலே பிரம்மாண்டம்தான் நினைவுக்கு வருதிறது. பிரமாண்டமான கோவில், பிரமாண்டமாக காணப்படுகிறது. திருவாரூர் கோவிலுக்குள் சென்று விட்டால் ஏராளமான சன்னிதிகள் இருப்பதால் குவிந்த கரங்களை விரிப்பதற்கு வழியே இல்லை என்பார்கள்.

தியாகராஜர் வரலாறு:


தியாகராஜர் சன்னிதிக்கு செல்லும் நுழைவு வாயில்
திருமாலானவர், சிவபெருமானை நோக்கி தவம் செய்ய அகமகிழ்ந்த சிவன் உமையவளுடன் தோன்றிய போது சிவனை மட்டும் திருமால் மீது சாபமிட கலங்கி நின்றார்
திருமால் . இதனை போக்க மீண்டும் சிவனை வழிபாடு செய்து வந்தார். அதன் பின் மீண்டும் உமையவளுடன் சிவன் தோன்றிய போது உரிய முறையில் திருமால் வணங்க இதனால் மகிழ்ந்த உமையவள் சாபத்துக்கான விடை தந்தார். அதனைக் கண்டு மகிழ்ந்த திருமால் , சிவனை சோமஸ்கந்த திருக்கோலத்தில் எழுந்தருள கோரி தன் நெஞ்சக் கோவிலில் நிறுத்திக் கொண்டார். திருமாவின் உள் சுவாசத்தில் (மூச்சு காற்றை இழுத்து வெளிவிடுதல்) சிவபெருமானும் அசைந்தபடி ஆனந்தம் கொண்டு திருமாலுக்கு திருவருள் தந்தார் இதுவே அஜபா நடனம் எனக் கூறப்படுகிறது.


இந்திரன் பூஜித்த மரகத லிங்கத்திற்கு தினமும் அபிஷேகம்:


திருவாரூர் தியாகராஜர் கோவில் கொடிமரம்
ஒரு முறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்ப்பட்டது. அவர்களை முசுகுந்தச் சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தார். அதற்கு கைமாறாக முசுகுந்தச் சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும் என இந்திரன் கேட்டார். அதற்கு அவர் திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த லிங்கத்தை கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜை செய்யும் அந்த லிங்கத்தை ஒரு மனிதனுக்கு தர இந்திரனுக்கு மனதில்லை. தேவ சிற்பியான மயனை வரவழைத்து தான் வைத்திருந்தது போலவே 6லிங்கங்களை செய்து அவற்றை கொடுத்தார் இந்திரன். முசுகுந்தன் அவை போலியானவை என்பதை கண்டுபிடித்துவிட்டதால் வேறு வழியின்றி இந்திரன் நிஜலிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் அவரிடம் கொடுத்து விட்டார். அந்த நிஜ லிங்கமே இன்றும் திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்களை முசுகுந்தச் சக்கரவர்த்தி திருவாரூரை சுற்றியுள்ள திருப்பழனம், சதிறுசாற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்தானம் என்ற ஆறு தளங்களிலும் பிரதிஷ்டை செய்தார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தினமும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுவது போல் திருவாரூர் கோவிலில் தினமும் மரகத லிங்கத்திற்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்திரன் பூஜித்து வந்த நிஜ லிங்கத்திற்கு தான் அபிஷேகம் செய்யப்படுகிறது.

காலை 8.30 மணிக்கும், 11.00 மணிக்கும், இரவு 7 மணிக்கும் லிங்கத்திற்து அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளி பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்பட்டு பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படு;ம் பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுரத்தில் வைக்கப்பட்டிருக்கும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிதம்பர ரகசியம் காட்டப்படுவது போல, திருவாரூர் கோவிலில் தியாகராஜ ரகசியம் என்பது இக்கோவிலின் சிறப்பு தியாகராஜ சாமியின் திருமேனி தான் திருவாரூர் ரகசியம். இந்த ரகசியத்தை சோமகுல ரகசியம் என்று போற்றுகின்றனர். சிவாலயங்களில் திருவாரூர் கோவில் 156 வது தேவாரத் தலமாக போற்றப்படுகிறது. மாசிமாத அஸ்தத்தில் கொடியேற்றி, பங்குனி மாதம் ஆயில்யத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் சித்திரை விழா, ஆடிப் புரம் விழா, தெப்பத்திருவழா, நிறைபணிவிழா ஆகியவை சிறப்பான விழா நாட்களாகும்.


மனுநீதிச் சோழன் மகனை உயிர்பித்த தியாகராஜர்:


திருவாரூரை ஆண்ட மனுநீதிச் சோழனின் மகன் ஓட்டிச் சென்ற தேர்க்காலில் பட்டு கன்று ஒன்று இறந்து போக நீதியை நிலைநாட்ட தனது மகன் வீதிவிடங்கனைக் கிடத்தி, தேர்க்காலில் இட்டுக்கொன்ற போது தியாகராஜ பெருமானே தோன்றி அவருடைய மகனை உயிர்ப்பித்தாக பெரியபுராணம் வரலாறு கூறுகிறது. மகாலட்சுமியானவர் தவம் செய்து மகாவிஷ்னுவைத் திருமணம் செய்ததும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தியாகராஜரை வழிபாடு செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என நம்பப்படுகிறது. திருமணத்தடையை நிவர்த்தி செய்ய இங்குள்ள ரௌத்திர துர்க்கை அம்மனை வழிபடலாம்.


தனி கோவிலில் அருள்பாலிக்கும் கமலாம்பிகை:


கமலாம்பிகை சன்னிதிக்கு செல்லும் பாதை
இக்கோவிலில் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் ஈசானியத்தை நோக்கி அமைந்துள்ளது அருள்மிகு கமலாம்பிகை திருக்கோவில். லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறார். இங்கு தனிக்கொடிமரத்துடன், தனிக்கோவில் கொண்டு அருள் பாலித்து வருகிறார். இங்கு அம்பிகை சிரசில் சர்வேஷ் வரனைப் போன்று கங்கையையும், பிறையும் சூடிக்கொண்டுள்ளார். 64 சக்தி பீடங்களுள் அன்னை ஆட்சி புரியும் ஐந்து பீடங்களில் முதன்மையானதாக அம்பிகை கமலாம்பிகை திகழ்கிறார். இவரை துர்வாச முனிவர் வழிபட்டுள்ளார். திருவாரூரில் பிறந்த இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் அம்பிகையின் அருளை வியந்து “நவாவர்ண கீர்த்தனை” பாடியுள்ளார். அம்பிகையின் தவத்தினால்தான் வன்மீகநாதரே இல்லத்திற்கு எழுந்தருளினார் என்பார்கள். இங்கு ஆடிப்பூர விழா அம்பாளுக்கு மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.54 நாட்கள் 17 முறை ஒன்றிய மனதுடன் அம்பிகையை வலம் வந்தால் வேண்டுவனவற்றைத் தந்து அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.


அருள்மிகு அல்லியங்கோதை (நீலோத்பலாம்பாள்):


அருள்மிகு அல்லியங்கோதை (நீலோத்பலாம்பாள்) சன்னிதி:
இதுவும் இத்திருக்கோவில் உள்ளே அமைந்த தனிக்கோவில் ஆகும். இங்கு அம்பாள் இரண்டு கரத்துடன் ஆதி சக்தியாக காட்சி தருகிறார் பெயர்: அல்லியங்கோதை. வடமொழியில் நீலோத்பலாம்பாள் என்பர். வேறு எங்கும் காண இயலாத வகையில் தனிச்சிறப்புடன் அம்பால் காணப்படுகிறார். அம்பாலுக்கு அருகில் ஒரு தோழி நிற்கிறார் அவர் தோளில் முருகப்பெருமான் அமர்ந்துள்ளார். தோழியின் தோழில் அமர்ந்துள்ள முருகப்பெருமானின் தலையைத் தொட்டுத் தடவிக் கொடுப்பது போல திருமேனி அமைந்துள்ளது. இவ்வாறான திருவுருவம் வேறு எங்கும் காண இயலாதது.


அருள்மிகு ரௌத்திர துர்க்கை அம்பாள் (எரிசினக்கொற்றவை):

தியாகராஜர் கோவிலில் தெற்கு பிரகாரத்தில் ரௌத்திர துர்க்கை அம்பாளுக்கு தனிக் கோவில் உள்ளது . துர்க்கை அம்பாளின் தோளில் சூலம் இருப்பதால் ரௌத்திர துர்க்கை என சொல்லப்படுகிறது. தமிழில் அம்பாள் எரிசினக்கொற்றவை என போற்றப்படுகிறார். இங்கு ராகுகால வேளைகளில் துர்க்கைக்கு அர்ச்சனை, ஆராதனை செய்வதால் காரியம் சித்தியடைகிறது என்றும் தோஷங்கள் நீங்குகிறது என்றும் கூறப்படுகிறது. பொதுவாக வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சன்னிதியில் பிராத்தனைகள், ஆராதனைகள் நிறைய நடக்கின்றன. இந்த சன்னிதியில் ராகு காலத்தில் அர்ச்சனை செய்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும் என கூறப்படுகிறது. இதனால் தியாகேசருடன் இங்குள்ள துர்க்கையை வழிபட்டால் தடைபட்ட திருமணம், அரசு பதவி முதல் அரசியல் பதவி வரை எண்ணியது எண்ணியவாறு நிறைவேறும் என கூறப்படுகிறது.


திருவாரூரில் தேர் அழகு திருவாரூர் தேர் பவனி:


திருவாரூரில் தேர் அழகு என்பார்கள். திருவாரூர் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராகும். எண் கோணவடிவில் 7 அடுக்குகளை கொண்டு, 96 அடி உயரமும், 31 அடி அகலமும், சுமார் 300டன் எடையும் கொண்டது. இது முற்றிலும் அலங்கரிக்கப்படும் போது 400டன் எடையை கொண்டது. திருவாரூர் ஆழித்தேரின் வடம் பிடித்து இழுப்பதால் கயிலையில் இடம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். தேரோட்டத்தின் போது விநாயகர் தேர் முதலாவதாகவும், சுப்ரமணியர் தேர் 2வதாகவும், 3வதாக தியாகராஜர் தேரும், இதனைத் தொடர்ந்து நீலோத்பலாம்பாள் தேரும், இறுதியில் சண்டிகேஸ்வரர் தேரும் பவனிவரும். எட்டு குதிரைகள் பூட்டி பிரம்மா சாரதியாய் அமர, தேரில் தியாகராஜர் அமர்த்தப்பட்டு ஆழி தேர் அழகாய் பவனி வரும். தியாகராஜரின் ஆழித்தேர் அசையும் போதெல்லாம் மக்களின் தியாகேசா, ஆரூரா என முழக்கங்கள் விண்ணை பிளக்க, மேளம் தாளம் முழங்க சிவனடியார்களின் ஆடல் பாடலுடன் தேர் பவனி வரும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, தேர் அசைந்து ஆடியபடியே நகர்வதை காண கண் கோடி வேண்டும்.


மக்கள் கூட்டத்தினிடையே அசைந்தாடி வரும் தேர்:


சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவமாடுகிறார். திருவாரூரில் தியாகராஜரின் நடனம் அஜபா நடனம் எனக் கூறப்படுகிறது. இக்கோவிலில் தியாகராஜர் திருமாலின் மூச்சு காற்றுக்கு இணையாக அசைந்து ஆடியதால் இதனை அஜபா நடனம் என்பார்கள். தியாகராஜர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பதற்காக கோவில் வசந்த மண்டபத்தில் இருந்து தேருக்கு அல்லது ஆயிரம் தூண் மண்டபத்திற்கு நகரும் போதெல்லாம் இந்த அஜபா நடனம் ஆடப்படுகிறது. மேலும் கீழும் ஏறி இறங்கியும் முன்னும் பின்னும் சென்று வந்தும் அடியவர்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்த இறைவன் இங்கே அஜபா நடனம் ஆடுவதாக பக்தர்கள் கருதுகின்றனர்.


சப்த விடங்க தலங்கள்:


முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களை நிறுவியதலங்கள் சப்தவிட தலங்கள் என போற்றப்படுகின்றன. இந்த தியாகராஜர் உருவங்கள் நடனத்திற்கு சிறப்பு பெற்றவையாகவும் உள்ளன. திருவாரூர் – வீதி விடங்கர், அஜபா நடனம், திருநள்ளாறு – நகர விடங்கர் – உன்மத்த நடனம், திருநாகைக்காரோணம் – சுந்தர விடங்கர் – வீசி நடனம், திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குங்குட நடனம், திருக்கோளிலி-அவனிவிடங்கர் – பிருங்க நடனம், திருவாய்மூர் – நீலவிடங்கர் – கமல நடனம், திருமறைக்காடு – புவனிவிடங்கர்-கம்சபாத நடனம் என 7வகை நடனங்கள் கூறப்படுகிறது.


கல்கோவிலாக மாற்றியமைத்தவர் செம்பியன்; மாதேவி:


செங்கல் கட்டுமான கோவிலாக இருந்த திருவாரூர் கோவிலை சோழப்பேரரசி செம்பியன்; மாதேவியால் கல் கோவிலாக மாற்றியமைக்கப்பட்டது. முதலாம் ஆதித்த சோழனால் கி.பி.9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் மற்றும் நாயக்கர் விஜயநகர மராட்டிய மன்னரகளால் பராமரிக்கப்பட்டிருக்கிறது. தஞ்சை சரபோஜி மன்னன் கும்பாபிஷேகம் நடத்திய பெருமை இன்றும் பேசப்படுகிறது.


கடன் பிரச்சனைகளை தீர்க்கும் ரண விமோசனர்:


திருவாரூர் கோவிலில் ரண விமோசனர் சன்னிதி உள்ளது. ரண என்ற சமஸ்கிரத சொல்லுக்கு கடன் என்ற பொருளும் உண்டு. வராத கடனையும், நெடுநாள் தீராத நோய்களையும் இவரை வழிபடும் பக்தரகளுக்கு தீர்த்து வைப்பதால் ரண விமோசனர் என அழைக்கப்படுகிறார். இந்திரன் தனது உடலில் இருந்த தோல் நோயை நீக்க தியாகராஜர் கோவிலில் உள்ள ரண விமோசனரை வழிபாடு செய்து தனது நோய் நீங்க பெற்றார் என்பது புராணம். ரண விமோசனர் சன்னிதியில் அமாவாசை தனத்தன்று அபிஷேகம், உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டால் மிகவும் பலனை கொடுக்கும் என்கிறார்கள்.


அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்படும் பழங்கால சிலைகள்
:


திருவாரூர் மேற்கு கோபுரம் அருகே உள்ள அருங்காட்சியகம் எதிரே வைக்கப்பட்டுள்ள 10 அல்லது 11ம் நூற்றாண்டை சேர்ந்த கருங்கல் புத்தர் சிலை.
திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர நுழைவு வாயில் அருகே அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. அங்கு திருவாரூர் மாவட்டத்தின் வரலாறு தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் நடராஜர் சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகள், பழங்கால இசைக்கருவிகள், மன்னர் காலத்து நாணயங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


மேலும் பல்வேறு இடங்களில் கண்டரியப்பட்ட பழங்கால சிற்பங்கள், சிலைகள் இங்கு வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் முகப்பில் ஒரு அழகிய புத்தர் சிலை ஒன்று உள்ளது. இந்த திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், கண்டிரமாணிக்கம் எனும்ஊரில் பள்ளம் தோண்டிய போது இந்த புத்தர் சிலை புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்;டது. இந்த கருங்கல் சிற்பம் ஒருங்கிணைந்த தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்;களை உள்ளடக்கிய சோழ நாட்டில் காணப்படுகின்ற 66-வது புத்தர் சிற்பமாகும். இந்த கருங்கல் சிலை சுமார் கிபி. 10 அல்லது 11 ம் நூற்றாண்டை சார்நததாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சிற்பம் கிடைத்த ஊரில் பௌத்தப்பள்ளி இருந்ததற்கு உண்டான சான்று உள்ளது. 63 அங்குல உயரமும், 33 அங்குல அகலமும் உள்ள இந்த கருங்கல் சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. தியானக் கோலத்தில் புன்னகை தவழும் இதழ்களோடு புத்தர் காட்சி அளிக்கிறார்


பிரமாண்டமான கமலாலய தீர்த்த குளம்:


திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கமலாலய தீர்த்த குளம்.
இக்கோவிலின் முக்கய தீர்த்தமான கமலாலய தீர்த்த குளம் கோவிலின் மேற்கு பகுதியில் கோவிலை போலவே பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இக்குளத்தின் மையத்தில் நாகநாதர் சன்னிதி உள்ளது. மகாலட்சுமி விஷ்ணுவை மணக்க இங்கு தவம் செய்ததால் கமலாலயம் என்ற பெயர் பெற்றது. இக்குளம் 33 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. கமலாலயம் குளத்தின் நடுவில் சிறிய கோபுரத்துடன் ஸ்ரீ நடுவான நாதர் கோவில் உள்ளது அங்கு செல்ல வேண்டுமென்றால் நாம் படகில் தான் செல்ல வேண்டும். கமலாலய தீர்த்த குளத்தில் நீராடினால் கும்பகோணத்தில் 12 மகாமக குளத்தில் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம். இங்கு பிரதோஷ அபிஷேகம் மிக விசேஷமானது. மேலும் கோவிலன் வடக்கே சந்திர நதி ஓடுகிறது. கோவிலின் முன் பிரம்ம தீர்த்தமும், தெற்கில் இந்திர தீர்த்தமும், மேற்கில் அகஸ்திய தீர்த்தமும் உள்ளன. அம்மன் சன்னிதி அருகில் உள்ள சக்தி தீர்த்தத்தில் இருந்து தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

கோவில் பிரகாரம்:


கோவிலை சுற்றி பார்க்க ஒரு நாள் போதாது
தமிழகத்தில் திருக்கோவில்களிலேயே தலையானதாக போற்றப்படும் பெருமை திருவாரூர் திருக்கோவிலுக்கு உரியதாகும். மகேந்திர பல்லவன் காலம் தொடங்கி சோழர்கள், பண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், தஞ்சை நாயக்கர்கள், மராட்டியர்கள் காலம் வரை மலர்ந்த கலை செல்வங்களையும், இலக்கியங்களையும் வரலாற்றுச் செய்திகளையும் தன்னில் கொண்டு திகழும் திருவாரூர் திருக்கோவிலின் தொன்மை சிறப்பு போற்றுதலுக்கு உரிய ஒன்றாகும். எண்ணிலாப் பழம் பெருமைகளைகளோடு, ஏற்றமிகு சிற்பக் களஞ்சியத்தாலும், வளமை மிகு இலக்கிய வளத்தாலும், கவின்மிகு கட்டிடகலைச் சிறப்பாலும், காவியங்கள் பேசிடும் ஓவியங்களாலும் இக்கோவில் சிறப்புடன் காட்சியளிக்கிறது. பிரம்மாண்டமான கோவிலான திருவாரூர் கோவிலை சுற்றி பார்க்க ஒருநாள் போதாது.