
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்பாடற்ற மொபைல் எண்களில் இருந்து யு.பி.ஐ ஐடிக்களை நீக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மோசடி பரிவர்த்தனை செய்வதைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏப்ரல் 1 முதல் செயல்படாத மொபைல் எண்களுடன் தொடர்புடைய யு.பி.ஐ ஐடிக்களின் இணைப்பை நீக்குவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) சமீபத்தில் அறிவித்தது.
அதாவது, ஜிபே (Gpay), போன்பே (PhonePe) மற்றும் யு.பி.ஐ செயலிகளை, மொபைல் பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துபவர்கள், செயலற்ற எண்ணைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை செயல்படுத்த முடியாது.
இதன் பொருள் என்ன?
உங்கள் மொபைல் எண் நீண்ட காலமாக செயலிழந்திருந்தால், NPCI -ன் புதிய வழிகாட்டுதல்கள்படி, வங்கிகள் தங்கள் கணக்குப் பதிவுகளில் இருந்து அதை அகற்றலாம். மேலும், உங்கள் கணக்கிற்கான யு.பி.ஐ சேவைகளை இடைநிறுத்தலாம் என்று கூறுகிறது.

சில செயலற்ற மொபைல் எண்கள், வங்கி மற்றும் யு.பி.ஐ அமைப்பில் தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் NPCIதெரிவித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கை மோசடி ஆபத்தைக் குறைக்க உதவும். இது மற்றொரு நபருக்கு மறுஒதுக்கீடு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்ட யு.பி.ஐ இயக்கப்பட்ட கணக்கைப் பயன்படுத்தினால் நடக்க வாய்ப்புள்ளது.
யு.பி.ஐ சேவைகளுக்கான அணுகலை இழக்கும் அபாயம் யாருக்கு உள்ளது?
நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய மொபைல் எண்ணுக்கு மாறியிருந்தாலும், உங்கள் வங்கிக் கணக்கு உங்கள் பழைய எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இந்த புதிய வழிகாட்டுதல்கள், செயலற்ற மற்றும் மறுஒதுக்கீடு செய்யப்பட்ட மொபைல் எண்களுடன் யு.பி.ஐ கணக்கை பயன்படுத்துபவர்கள் அல்லது தங்கள் வங்கிப் பதிவுகளில் புதுப்பிக்காமல் சிம்மைச் சரணடைந்த பயனர்களையும் பாதிக்கும்.

இது நடக்காமல் தடுப்பது எப்படி?
இது நிகழாமல் தடுக்க, பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள பயன்படுத்தப்படாத மொபைல் எண்களைச் சரிபார்த்து, அவற்றை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உங்கள் பழைய செயலற்ற எண்ணைப் புதுப்பித்து, சேவைத் தடங்கலைத் தவிர்க்க ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன் தற்போதைய எண்ணை மாற்ற வேண்டும்.