சூர்யா அகரம் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவியை செய்து வருகிறார். 2006-ஆம் ஆண்டு முதல் அகரம் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் சூர்யா, குறிப்பாக முதல் தலைமுறை மாணவர்களுக்கு உதவியை செய்து வருகிறார். இந்த நிலையில் அகரம் ஃபவுண்டேஷனுக்காக சென்னையில் புதிய அலுவலகத்தை சூர்யா திறந்துள்ளார்.

இதனை திறந்து வைத்து சூர்யா பேசுகையில், 2006ல் சின்ன அறையில் அமர்ந்து சிந்தித்து விதைத்த விதை இப்போது ஆலமரமாக நிற்கிறது. கஜினி படம் முடிந்த பின், மக்களுக்கு தனது அன்பை திருப்பி கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது இயக்குநர் ஞானவேல் ஒரு கேள்வியை கேட்டார். இப்போதும் முதல் தலைமுறை மாணவர்கள் இருக்கிறார்கள்.
அப்பா, அம்மாவால் பணம் கொடுக்க முடியவில்லை என்பதால், பல முதல் தலைமுறை மாணவர்களின் படிப்பு நின்றுவிடுகிறது. அரசுப் பள்ளியில் படித்தால்கூட, பின் என்ன செய்வதென தெரியாமல், எப்படி உதவி கேட்பது என்று தெரியாமல் தினக் கூலிகளாக அவர்களின் வாழ்க்கையே மாறிவிடுகிறது என்று சொன்னார். அந்த கேள்விதான் அகரம் தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது.

அப்போது 10க்கு 10 அறையில் தான் தொடங்கினோம். அதன்பின் 2 அறைகள் கொண்ட வீட்டில் அகரம் பணிகள் நடந்தது. பின்னர் என் தந்தை சிவக்குமார் கொடுத்த இடத்தில் பணிகளை தொடர்ந்தோம். 2010-ஆம் ஆண்டுதான் விதை என்ற திட்டம் தொடங்கினோம்.
அரசுப்பள்ளியில் படித்து முடித்த மாணவர்கள், மாணவிகளை கல்லூரியில் சேர்க்கும் திட்டமே விதை. அவர்கள் அனைவருமே முதல் தலைமுறை மாணவர்கள்.
5,813 மாணவ, மாணவிகள் படித்து முடித்துள்ளார்கள். இன்னும் 2 ஆயிரம் பேர் படித்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை அரசுப் பள்ளியில் மாணவர்கள் படிக்கிறார்கள் என்ற விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதத்திற்கு மேல் மாணவிகள் தான் படிக்கிறார்கள். 2010-ல் 100 மாணவர்களை படிக்க வைக்க விரும்பினோம். அப்போது 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தது.

இப்போது ஆண்டுக்கு 700 மாணவர்களை படிக்க வைக்கிறோம். அதேபோல் இப்போதும் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதன் மூலமாக தேவைகள் குறையவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 2025-ல் கூட நம் சமூகத்தில் முதல் தலைமுறை மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். பல குடும்பங்களில் இந்த நிலை இருக்கிறது. கல்வியே ஆயுதம், கல்வியே கேடயம்.
20 ஆண்டுகள் தொய்வடையாமல் வீரியத்துடன் அகரம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் சமூகத்தை சேர்த்து சிந்திக்கிறார்கள். அதுதான் எங்களை தொடர்ச்சியாக ஓட வைக்கிறது. இந்த இடம் படிப்புக்காக கொடுத்த நன்கொடையில் வாங்கிய இடம் கிடையாது. எனக்கு கிடைத்த வருமானத்தின் மூலம் கட்டிய இடம். நன்கொடையாக வரும் ஒவ்வொரு காசும், படிப்புக்காக பயன்படுத்துகிறோம்.

இன்னும் நிறைய பேரின் அன்பு தேவையாக உள்ளது. பணம் மட்டுமல்லாமல் உங்களின் நேரம் தேவையாக உள்ளது. கல்வராயன் மலையில் இருந்து ஒரு மாணவர் விண்ணப்பம் கிடைத்த பின்னரும், அவர்களை சென்று பார்க்க முடியவில்லை. நடந்து சென்று அந்த மலையில் ஏற முடியவில்லை. 9 முறை முயன்று, 10-வதாக சென்று ஒருவர் கண்டறிந்தார். அந்த தம்பி இப்போது மருத்துவராக இருக்கிறார்.
இதனால் தன்னார்வலர்களின் பணி மிகவும் முக்கியம். இந்த இடத்தில் புதிய பயிற்சிகள், புத்தக வாசிப்பு, புத்தக வெளியீடு உள்ளிட்டவற்றை நடத்த முடிவு செய்திருக்கிறோம். அறிவை பகிர்வதற்கான இடமாக இருக்கும். எனக்கு இது தாய் வீடு போன்றது. சொந்த வீடு கட்டிய போது இருந்த சந்தோஷத்தை விட அகரம் புதிய அலுவலகம் திறப்பு நாள் சந்தோஷமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.